பக்கம் எண் :

3. அகலமும் ஆழமும் 19  
 
     திருவள்ளுவர் உழவின் பெருமையை உணர்ந்து போற்றியவர்; உழவரை
உலகத்தார்க்கு ஆணி எனச் சிறப்பித்தவர்; இந்த நாட்டில் பெரும்பாலான மக்களுடைய
தொழிலாக இருக்கின்ற ஒரு காரணம் பற்றி மட்டும் அல்லாமல், வாழ்க்கைத் துறைகள்
பலவற்றிற்கும் அதுஅடிப்படையாக அமைந்திருக்கின்ற காரணம் பற்றியும் அறிஞர்
பலரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். 
 
  உழவினர் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
(திரு. 1036) 
 
என்ற திருவள்ளுவர் வாய்மொழி, துறவற நிலைக்கும் உழவர் தொண்டு அடிப்படையாக
உள்ள சிறப்பை விளக்குகின்றது. இவ்வாறு உழவரைச் சிறப்பித்தலோடு திருவள்ளுவர்
நிற்காமல் போர்க்களத்து வீரரையும் உழவர் என்கிறார்; அவைக்களத்துப் புலவரையும்
உழவர் என்கின்றார். வீரரை வில்லேருழவர் என்றும், புலவரைச் சொல்லேருழவர்
என்றும் குறிப்பிடுகின்றார். மற்றத் தொழில்களையும் உழவு என்னும் அளவுகோல்
கொண்டு அளந்து பார்க்கும் மனப்பான்மையே இதில் காண்கின்றோம். 
 
     சங்க காலத்துப் புலவர்களுக்கும் இத்தகைய மனப்பான்மை இருந்திருக்கிறது. தம்
வாழ்க்கைத் துறையாகிய புலமைத் தொழிலை உழவு என