பழங்காலத்து வாழ்க்கைப் போக்கும் அறிந்திருக்க வேண்டும். சொற்களின் பொருளை உணர, இலக்கியப் பயிற்சி ஓரளவுக்கு வேண்டும். பழங்கால வாழ்க்கைப் போக்கை உணர வரலாற்று அறிவு ஓரளவுக்கு வேண்டும். | இவை வேண்டும் எனவே, இவற்றையே- இவற்றை மட்டுமே- தேடிக்கொண்டு காலம் கழிப்பதால் பயன் இல்லை. நாடகத்தைக் காணச் சென்றவர், கண்ணையும் ஒலியையுமே நினைத்துப் போற்றிக் கொண்டிருந்தால் பயன் விளையாது. தன்னை மறந்து நாடகத்தில் ஈடுபடல் வேண்டும்; தன்னை இழந்து இன்ப துன்பம் உறுதல் வேண்டும். அவ்வாறே கதையும் காவியமும் கற்பவர், சொற்பொருள் பயிற்சியும் வரலாற்று அறிவும் வாய்ந்தவுடனே, அவற்றையும் மறந்து கதை உலகிற்கும் காவிய உலகிற்கும் விரைந்திடல் வேண்டும். | ஆகவே, சொற்பயிற்சியையும் வரலாற்று அறிவையும் கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அவற்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்தல் கூடாது. பாட்டுக்களின் சொற்களுக்கு விளக்கம் செய்தலும் பாட்டுக்களில் உள்ள வரலாற்றை ஆராய்தலும், காவியக் கலையின் பயன் ஆகா. அவற்றின் பொருட்டுக் காவியத்தைக் கற்பதைவிட, அகராதிகளை நெட்டுருச் செய்து கொண்டும் வரலாற்று நூல்களைத் தேர்ந்து கொண்டும் காலம் கழிப்பது நன்று. காவியக் கல்வி இவற்றைக் கடந்தது; இவற்றைக் கருவிகளாகக் கொண்டு கற்பனையுலகத்து உணர்ச்சிகளை எய்துவது. | காவியத்தில் உள்ள நாட்டு வரலாறு பழக்க வழக்கம் முதலியவற்றை ஆராய்தலும் பயனுடையது அன்றோ எனின், அது நாடகம் காணச் சென்று மேடையில் நடிப்பவரின் உடையழகையும், உடலழகையும் அங்குள்ள திரைகளின் பலகை வண்ணங்களையும் தூண்களின் | | |
|
|