பக்கம் எண் :

184 இலக்கிய ஆராய்ச்சி
 
காவியங்களைப் படைத்துத் தர வல்லவர்களாகின்றனர்.
 
     கதையிலும் காவியத்திலும் உள்ள உணர்ச்சியைப் பெற்றுக் கற்பனை உலகத்தில்
வாழ்தலே பயன் எனின், கதைக்கும் காவியத்திற்கும் வேறுபாடு இல்லையே என
வினவலாம். வேறுபாடு உண்டு. கதை, ஒலிநயம் இல்லாத சொற்றொடர்களால் அமைவது.
காவியமோ ஒலிநயம் அமைந்த பாட்டுக்களால் அமைவது. ஒலிநயம் கற்பனை
உலத்திற்குப் பறக்க உதவும் சிறகுகளை நல்குவது. குழந்தை தூங்குவதற்குத் தாலாட்டு
உதவுவது போல், மனம் கற்பனை உலகத்தில் பறப்பதற்கு பாட்டின் ஒலி நயம்
உதவுகிறது. அந்தக் கற்பனை உலகத்தின் திறவு கோல் போலவும் ஒலிநயம்
அமைந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பாட்டின் அடியைக் கேட்டவுடன், கற்பனை உலகம்
மனத்தில் நிரம்புகிறது. ஆனால், கதையின் ஒரு வாக்கியம் ஒன்றைக் கேட்டவுடனே
அதன் கற்பனை, நினைவுக்கு வருவதில்லை. கதையின் உரைநடை பலமுறை திரும்பத்
திரும்பப் படிக்கத் தூண்டுவதில்லை. காவியத்தின் ஒலி நயமோ திரும்பத் திரும்ப அதை
ஒலிக்கவும் ஒலிக்கக் கேட்கவும் தூண்டுகிறது. ஆதலின் கற்பனை உலகத்தோடு
நெருங்கிய உறவு உண்டாக்கித் தரும் இந்த ஒலி நயத்தை நன்கு நுகரும் திறனும்
 காவியம் கற்பதற்கு மிகப் பயன்படுவதாகும்.