பக்கம் எண் :

 பாடும் தகுதி 187
 
என்னும் ஆங்கிலக் கதையாசிரியர், தாம் எழுதிய கதைகள் தம்மை அறியாமலே
உருவானதாகக் கூறியுள்ளார். ஒரு கதையை இவ்வாறு முடிப்பது எனத் திட்டமிட்டு
ஆசிரியர் எழுதிக் கொண்டே போகும்போது, ஒரு பாதி எழுதி முடிந்தபின், மற்றப்
பாதி வேறு வடிவாய் அமைந்து மாறிச் சென்று முடிவது உண்டு. இது கதையாசிரியர்
பலருடைய அனுபவமாகும். ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் உணர்ச்சிகள்
வளர்ந்தோங்கி நிற்கும்போது, அவை தாமே வடிவு பெறுவதையும் ஆசிரியர் ஒரு
கருவியாய் இயைவதையும் அறியலாம். 
 
     மேடை ஏறிச் சொற்பொழிவுகள் ஆற்றுவோருக்கும் இத்தகைய முறையில் சிறு
அனுபவம் ஏற்படுவது உண்டு. முன்னே குறிப்பெழுதி திட்டமிட்டுப் பேசத்
தொடங்கலாம். ஆனால், பேச்சின் வேகமும் உணர்ச்சியும் அவரை ஆட்கொண்டு
இயக்கும் ஒரு நிலை வரும். அப்போது அவருடைய உடலில் இருந்த நோய்
ஒதுங்கிவிடும்; சோர்வு அகன்றுவிடும்; அவருடைய அறிவில் இருந்த தயக்கம்
போய்விடும். முன் எண்ணியிராத புத்தம் புதிய கருத்துக்கள் பிறந்து வெளிப்படும்.
புத்தம் புதிய உவமைகளும் எடுத்துக் காட்டுக்களும் தாமே தோன்றிப் பேச்சை
அழகுபடுத்தும். பேச்சு முடிந்தபின், இவை எப்படி வந்தன என்று சொற்பொழிவாளரே
எண்ணி எண்ணி வியப்புறுவார். 
 
     இதைத்தான் அகத்தெழுச்சி (Inspiration) என்று கூறுவர். இந்தச் சிறந்த
அனுபவம் உடையவர்களே கலையுலகத்தில் புகுந்து புதியன படைக்கும் தகுதி
உடையவர்கள். இந்த அனுபவம் இல்லாதவர்கள் கவிபாட முற்படுதல் வீண் முயற்சி.
அவர்கள் செய்யுள் இயற்றலாம்; கவிபாட முடியாது. அவர்களின் செய்யுளில் எதுகை
மோனை இருக்கலாம்; கலைத்தன்மை இருக்காது. ஆகவே, கவிபாடும் தகுதியைச்
சிறப்புறத் தருவது அகத்தெழுச்சியே எனலாம்.