பக்கம் எண் :

  25. ஆராய்ச்சிப் படிகள்
 
     அறிவியல் (Science) துறையில் ஆராய்ச்சி செய்து முடிவு காண்பது எளிது;
அரசியல் துறையிலோ சமயத் துறையிலோ இலக்கியத் துறையிலோ அவ்வளவு எளிது
அன்று. அறிவியல் துறையில் ஆராய்ச்சி நிகழ்த்துவதற்குத் துணைக் கருவிகள் பல
உள்ளன; தராசு முதலான கருவிகள் உள்ளதை உள்ளவாறே அளந்து அறிவிப்பவை.
ஆகையால் அறிவியலார் (Scientists) பலர் சேர்ந்து ஆராய்ந்து ஒரே வகையான
முடிவுக்கு வர முடியும். ஆனால் அரசியல் முதலிய துறைகளில் எந்தத் தராசு கொண்டு
அளந்து காண முடியும்? காணும் காரணங்களும் அவரவர் மன நிலைக்கு ஏற்றபடி
கற்பித்துக்கொள்ளக் கூடியவை. ஆகையால்தான் அரசியல் முதலிய துறைகளில் கருத்து
வேறுபாட்டுக்கும் மாறுபாட்டுக்கும் நிறைய இடம் இருக்கின்றது.
 
     அறிஞர் ஒருவர் தம் கட்சியின் கொள்கையே தக்கது என்று உறுதியாகக்
கூறுவார். அவரைப் போன்ற அறிஞர் மற்றொருவர் அவ்வளவு உறுதியாகவே அந்தக்
கட்சிக் கொள்கையை மறுத்து வேறு கட்சியைப் போற்றுவார். இது உலகெங்கும் காணும்
உண்மை. சமயத் துறையிலும் இவ்வாறே உள்ளது. தம்தம் சமய நெறியே மற்றவற்றினும்
உயர்ந்தது என்று பலரும் நம்புகின்றனர். அவ்வாறு நம்புகின்ற மக்களில் அறிஞரும்
உள்ளனர்; ஆராய்ச்சியாளரும் உள்ளனர். ஆற்றல் மிக்க அறிவும் ஆராய்ச்சியும்
உண்மையாகக் காண முடியாதபடி மனநிலை தடுக்கின்றது.