பக்கம் எண் :

ஆராய்ச்சிப் படிகள் 189
 
     இலக்கியத் துறையிலும் இதே நிலை காணப்படுகின்றது. புலவர் ஒருவர்
வானளாவப் புகழ்ந்து போற்றும் நூலையே மற்றொருவர் பயனற்ற நூல் என்று
தூற்றுவதையும் காண்கின்றோம். ஒருவர் குணம் என்று கொள்ளுவதையே மற்றொருவர்
குற்றம் என்று தள்ளுவதையும் காண்கிறோம். இருசாராரும் தம் முடிவை ஆராய்ச்சி
முடிவு என்றே நம்புகின்றனர். தம் கருத்துக்கு மாறுபட்டவர்களை ஆராய்ச்சி
அற்றவர்கள் என்று பழிக்கின்றனர்.
 
     அறிவியல் துறையில் ஆராய்ச்சிக்குத் துணைக்கருவிகள் பல இருப்பது போல்,
இலக்கியம் முதலியவற்றிலும் இருந்தால், இந்தத் தொல்லை இருக்காது. ஆனால்,
அறிவியல் ஆராய்வது மண், நீர், தீ, காற்று முதலிய பொருள்களையும் அவற்றின்
கலப்புகளையுமே ஆகும். அவற்றை எடை போடுதல், முதலியவற்றால் அளந்து காண
முடியும். அதனால் விஞ்ஞான ஆராய்ச்சி எளிது ஆகின்றது. ஆனால் இலக்கியம்
 முதலிய துறைகளில் ஆராயப்படுவது கருத்து என்னும் ஒரு வகைச் சரக்கு. இந்தச்
சரக்கை எந்தக் கருவிகளைக் கொண்டு அளக்க முடியும்? மனம் என்னும் கருவியும்
அறிவு என்னும் நடுநிலையாளனுமே வேண்டும்.
 
     திருவள்ளுவர் அரசியல் ஆட்சித் தலைவனுக்குக் கூறிய அரிய அறிவுரை இங்கு
பயன்படுகின்றது. ஆராய்ச்சிக்கு முதல் படியும் இரண்டாம் படியும் மூன்றாம் படியுமாக
மூன்று படிகள் இருப்பதாக அந்தக்குறள் உணர்த்துகின்றது.
 
     நம்பிக்கை, விருப்பு, வெறுப்பு இவை வேறு. இவற்றிற்கு இடம் தராத மன
நிலையே ஆராய்ச்சி செய்வதற்குத் தகுதி உடையது. ஒன்றில் நம்பிக்கை உடையவர்,
அந்த ஒன்றையே போற்றுவர்; மற்றவற்றைப் பொருட்படுத்தவும் மாட்டார். விருப்பு
உடையவர் விரும்பிய ஒன்றைக் கண்மூடி ஏற்றுக்கொள்வார்; விரும்பாதவற்றில் மனம்
செலுத்தார்;