பக்கம் எண் :

190 இலக்கிய ஆராய்ச்சி
 
நன்மைகாணினும் அதை ஒதுக்குவார், வெறுப்பு உடையவரும் அவ்வாறே நடுநிலை
அற்றவராய் ஒன்றை வெறுப்பார்; குணம் காணினும் கொள்ள மாட்டார். "வேண்டுதல்
வேண்டாமை இலான்" என்று திருவள்ளுவரால் போற்றப்பட்ட இறைவனைப் போல்
ஆராய்ச்சி செய்யும் நேரத்திலேனும், விருப்பு வெறுப்பு அற்ற நடுநிலையில்
நின்றால்தான் உண்மை விளங்கும்.
 
     அத்தகைய நடுநிலையில் நின்றால், ஒரு நூலை எடுத்து ஆராயத்
தொடங்கும்போது, அதன் எல்லாப் பகுதிகளையும் ஆராய்ந்தறிய முடியும்; விரும்பிய
பகுதிகளைப் படித்து வெறுப்பான பகுதிகளை ஒதுக்காமல், நூல் முழுதும் கற்க முடியும்.
அப்போதுதான் நூலின் நல்ல பகுதிகளும் தெரியும்; மற்ற பகுதிகளும் தெரியும்; குணம்
நாடிக் குற்றமும் நாட முடியும். இதுவே முழுதும் காணும் வழியாகும்; இதுவே
ஆராய்ச்சியின் முதல்படி.
 
     இரண்டாம் படி: குணம் குற்றம் இரண்டனுள் எது மிகுதி என்று ஆராய
வேண்டும். இதற்கு அடிப்படையாக ஒரு மூடநம்பிக்கையைத் தகர்க்க வேண்டும்;
உலகத்தில் முழுதும் நல்லது, முழுதும் கெட்டது என்று கூறத்தக்க பொருள்கள் இல்லை
என்று உணர வேண்டும். நல்லதை முழுதும் நல்லது என்று நம்புவதும் மூட
நம்பிக்கையே. கெட்டதை முழுதும் கெட்டது என்று நம்புவதும் மூட நம்பிக்கையே.
குணத்தில் சிறிதளவு குற்றமும் விரவியிருத்தல் இயல்பு. குற்றத்திற்கிடையே ஒரு சிறிது
குணமும் கலந்திருத்தல் இயற்கை. ஆகவே ஆராய்ச்சியாளர் நல்லது எது, தீயது எது
என்று ஆராய்வதை விட்டு, நன்மை மிகுதியாக உள்ளது எது, தீமை மிகுதியாக உள்ளது
எது என்று ஆராய வேண்டும். இதுவே மிகை நாடல் என்னும் இரண்டாம் படி ஆகும்.