பக்கம் எண் :

22 இலக்கிய ஆராய்ச்சி
 
காரணமாகப் படித்த பாடப் புத்தகங்களில் உள்ள பகுதிகளை அடிக்கடி மறந்து
விடுகின்றார்கள்; விருப்பின் காரணமாகப் பத்திரிகைகளில் உள்ள பகுதிகளை மறவாமல்
நினைவில் வைத்திருக்கின்றார்கள். சினிமா நடிகர்களின் பெயர்களும் அவர்களுடைய
தலைப் பெழுத்துக்களும் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தவறுபடாமல் விடை
சொல்லும் அளவிற்கு நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஆகவே, ஆழ உழும்
கல்விக்கு ஒத்துழைக்காமல், அகல உழும் முறைக்கு இளமை ஆர்வம் கொண்டிருப்பதை
உணரலாம். அதனால், பள்ளிக் கூடங்களில், பல செய்திகளையும் கருத்துக்களையும்
பரபரப்பாகக் கற்றுக்கொண்டு அறிவை வளர்க்கும் வாய்ப்பு அமைவது நல்லது. 
 
     அரசர்கள் அனைவருடைய பிறந்த நாளும் இறந்த நாளும், ஒவ்வொரு போரின்
தொடக்கம், விளைவு, முடிவு முதலிய விவரங்களும் ஆகியவற்றைச் சிறுவர்க்குக்
கட்டாயப்படுத்தி நினைவில் வைத்திருக்குமாறு வற்புறுத்தல் வீண் முறையாகும்; சிறுவர்
மனவளர்ச்சிக்குக் கேடும் ஆகும். வரலாறு, பூகோளம் முதலிய பல துறையில்
மேற்போக்காகக் கற்றல் - அகல உழும் முறையே - அவர்களுடைய வளர்ச்சிக்கு
நன்மை பயக்கும். பாட்டு, கணக்கு முதலிய சில துறைகளில் மட்டும் ஆழ உழும் முறை
இருந்தே தீரவேண்டும். ஆகையால், வேறு துறைகளில் மேற்போக்காகச் சிலவற்றைக்
கற்கச் செய்தலே போதும். 
 
     பள்ளிக்கூடச் சிறுவர்க்கு உள்ள மனநிறையே வளர்ந்தவர்க்கும் இருத்தலாகாது.
அது படிப்படியாக மாறி விட வேண்டும். அகல உழுதல், ஆழ உழுதல் என்ற
இருவகைக் கல்வியையும் போற்ற வேண்டும். ஒரு பக்கம் பற்பல நூல்களைப் படிக்கும்
பழக்கமும் வேண்டும்; மற்றொரு பக்கம் ஒரு சில நூல்களைத் தனியே