தேர்ந்தெடுத்துக்கொண்டு அவற்றில் அடிக்கடி ஊறித் திளைக்கும் பழக்கமும் வேண்டும். உலகில் மிகச் சிறந்த அறிஞர்களாகத் திகழ்ந்தவர் பலரும் இவ்வாறு கற்று முன்னேறியவர்களே. எடுத்துக்காட்டாக அறிஞர் பெர்னார்ட்ஷாவைக் குறிப்பிடலாம். பல்வகை நூல்களையும் படிக்கின்ற பழக்கம் அவரிடம் உண்டு. ஆனால் அவர் ஆழ்ந்து கற்றுத் தேறிய நூல்கள் இரண்டே. ஒன்று இலக்கிய ஆராய்ச்சி - அகலமும் ஆழமும் பைபில், மற்றொன்று ஷேக்ஸ்பியர் இலக்கியம். பைபிலில் தமக்கு மனப்பாடம் ஆகாத பகுதி இல்லை என்றும், ஷேக்ஸ்பியர் நாடகங்களில் தமக்குத் தெரியாத அடி ஒன்று இல்லை என்றும் அவர் பெருமை பாராட்டிக்கொள்வது வழக்கம். |
இவ்வாறு அகலக் கற்றும் ஆழக் கற்றும் வளர்ச்சி பெறாமல் தடைப்பட்டு நிற்கின்றவர்களும் உள்ளனர்; இந்த வளர்ச்சியைக் கடந்து அப்பால் நிற்கின்றவர்களும் உள்ளனர். |
வளர்ச்சி பெறாதவர் என்ற வகையில் முதலில் குறிப்பிடத் தக்கவர்கள், பலவகை நூல்களையும் மேற்போக்காகக் கற்று நுனிப்புல் மேய்கின்றவர்கள். அவர்கள் எந்த நூலிலும் தேர்ச்சி பெறுவதில்லை. "இதையும் படித்தேன்; அதையும் படித்திருக்கிறேன்" என்று சொல்லிக் கொள்ளும் பெருமை ஒன்றே அவர்களுக்குத் தனியுரிமை. அவர்களுக்குச் சில வேளைகளில் எல்லாம் பொய் போலவும் போலி எனவும் தோன்றும்; சில வேளைகளில் எதுவும் உண்மை என்று தோன்றும். எதையும் குற்றம் கூறவும் அவர்கள் முற்படுவர்; குற்றமானதையும் காரணம் கூறிக் குற்றமற்றதென நிறுவவும் அவர்கள் முனைவர். இந்நிலைக்குக் காரணம் அகல உழுதே காலத்தைப் போக்குதலாகும். ஆழ உழுவதே இதற்கு மருந்தாகும். |