பக்கம் எண் :

24 இலக்கிய ஆராய்ச்சி
 
     வளர்ச்சி பெறாதவர் என்ற வகையில் அடுத்து குறிப்பிடத் தக்கவர்கள்.
நூலுலகத்தின் பரப்பை ஒரு சிறிதும் அறியாமல், கிணற்றுத் தவளைகளாய், ஒரு சில
நூல்களில் மட்டுமே ஊக்கமும் ஆர்வமும் காட்டிக் காலத்தைக் கழிப்பவர்கள். வேறு
எந்த நூலும் அவர்களுக்கு வேப்பங் காயாய்க் கைக்கும்; கற்கவும் மனம் இருக்காது;
குற்றம் கூறுவதைக் கேட்கவும் மனம் இருக்காது. பழங்காலத்தில் இத்தகையவர் பலர்
இருந்தனர் என்று எண்ண இடம் இருக்கின்றது. கம்பராமாயணம் தவிர வேறு நூலைக்
கற்காமல் கற்க மனமும் இல்லாமல் வாழ்வோர், சங்க இலக்கியம் தவிர மற்றவற்றைக்
கண்ணெடுத்தும் பாராதவர், இலக்கணம் - இதிலும் குறிப்பிட்ட உரையாசிரியரின் உரை
தவிர வேறு எதையும் வேண்டாதவர் என்று இவ்வாறான நிலையில் பலர் தேங்கி
விடுதல் பழங்காலத்தில் மிகுதியாக இருந்தது. இராமாயணப் புலவர், தொல்காப்பியப்
புலவர், கலம்பகப் புலவர், என்றெல்லாம் புலவர் சிலரை அந்தந்த நூல்களின் பெயர்
சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் இருந்தது. ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்
இவ்வாறு ஒரு துறையில் தோய்ந்து நிற்பது கடமை; அவர்கள் மேலே குறிப்பிட்டவாறு
பொதுவாக அகல உழுதலோடு ஒரு பகுதியில் ஆழ உழுதலையும் மேற்கொண்டவர்கள்.
அவர்கள் போற்றுதற்கு உரியவர்கள். ஆனால் அகல உழுதலைக் கைவிட்டு, ஆழ
உழுதல் ஒன்றையே கைக்கொண்டவர்களின் நிலைமை வேறு. நூலகத்தில் வீரவழிபாடு
செய்கின்றவர்களாக அவர்களைக் குறிப்பிடலாம். அரசியலில் கொள்கையைப் பற்றியும்
நாட்டைப் பற்றியும் கவலைப்படாமல், குறிப்பிட்ட தலைவரைப் போற்றி வீரவழிபாடு
செய்தல் ஒன்றே கொண்டால் எவ்வளவு தீமையோ அவ்வளவு தீமை இங்கும் உண்டு.
அரசியலில் வீரவழிபாடு செய்பவர்க்குக் 'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை