மிக்க கொளல்' என்பது இயலாது; அதுபோலவே நூலுலகத்தில் வீரவழிபாடு செய்பவர்க்கும் குணம் குற்றம் இரண்டையும் நடுநிலையில் நின்று ஆராயும் ஆராய்ச்சியும் இயலாது. ஆராய்ச்சி செய்ய விரும்புகின்றவர்கள் மறக்காமல் போற்றவேண்டியது ஒன்று உண்டு. அதுதான், எத்தகையோரிடமும் குணம் மிக்கவரிடமும்-குற்றம் ஒரு சிறிது இருத்தல் கூடும் என்பது; அறிவு மிக்கவரிடமும் அறியாமை ஒரு சிறிது இருத்தல் கூடும் என்ற உண்மை. |
| அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. |
(திருக்குறள், 503) |
இவ்வாறு உணராவிட்டால் ஆராய்ச்சிக்கே இடம் இல்லை; தாம் கற்கும் நூலைப் போற்றிப் புகழ முடியுமே தவிர கல்வியின் பயனைப் பெற முடியாது. மாறாக, சில தீமையும் ஏற்படலாம். அந்த நூலில் உள்ள குற்றமும் அவருடைய மன நிலைக்குக் குணமாகவே தோன்றும்; நூலாசிரியரின் அறியாமையும் அவர்க்கு அறிவின் தெளிவாகவே தோன்றும். ஆகவே, உண்மை உணர்வதே அறிவின் பயன் என்று தொடங்கிய கல்வி முயற்சி, பொய்யையும் மெய் என்று கொள்ளும் மருட்சியில் முடியும். |
தாய்க்குத் தன் குழந்தையின் நெற்றியில் உள்ள வடு அழகின் குறையாகத் தோன்றாது; அழகின் பகுதியாகவே புலப்படும். லாண்டார் (Landor) எழுதிய 'கற்பனை உரையாடல்'கள் என்னும் நூலில் ஒருவன் தான் காமம் கொண்ட (காதல் கொண்ட நிலை அன்று) ஒருத்தியின் கையில் உள்ள மறுவை விரும்பி விரும்பி முத்தமிடுவதாகக் குறிப்பிடுகின்றார். இந்த நிலையே, அகல உழாமல் ஆழ உழுதலை மட்டும் மேற்கொண்டவரின் நிலையாகும்; அவர்க்கும் தாம் போற்றும் நூலில் உள்ள குறையும் குணமாகத் தோன்றும்; மற்றவை எல்லாம் குற்றமாகத் தோன்றும். |