பக்கம் எண் :

26 இலக்கிய ஆராய்ச்சி
 
     அறிவுத் துறையில் வளர்ச்சியடைந்தவர் சிலர் - புலமை முதிர்ந்தவர் சிலர் -
அகல உழுதலைக் கைவிடுவதும் உண்டு. அத்தகையவரைக் குறைகூற இயலாது.
பள்ளிக்கூடங்களில் படிக்காமலே தெளிந்த புலமை பெற்றவர்கள். நூலைக் காணாமல்
இயற்கையையும் வாழ்க்கையையும் கண்டு கண்டே எல்லாம் உணர்ந்தவர்கள் உலகில்
உண்டு; அவர்களைப் போலவே, குறிப்பிட்ட காலம் வரையில் அகல உழுது விட்டுப்
பிறகு அதைக் கைவிட்டு நிற்பவர்கள் உண்டு; 'கற்பனவும் இனி அமையும்' என்னும்
மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடும். ஆயினும், அகல உழுதலின் பயனை முன்னே
பெற்றுக் கொண்டவர்கள் ஆகையால் அவர்கள் இப்போது கல்வியை
வரையறைப்படுத்திக் கொண்டு போதும் என்கிற மனம் பெறுகின்றார்கள். 'இந்த ஒரு
நூல் போதும் என் வாழ்க்கைக்கு' என்று அத்தகையவர்கள் சொன்னால் அது முதிர்ந்த
அறிவுடைமையால் ஏற்பட்ட அனுபவம் என்று உணர வேண்டும்.
 
     கீட்ஸ் என்ற ஆங்கிலநாட்டுப் புலவரின் கடிதங்களில் காணும் உண்மையை
இத்தகைய ஆழ உழும் முறைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். பின்வரும் பகுதிகள்
காணத்தக்கவை.
 
     இன்று காலையுணவின் போது ஒருவகைத் தனிமைத் தொல்லை உணர்ந்தேன்.
உடனே சென்று ஷேக்ஸ்பியரின் நூலை எடுத்தேன். அங்கே ஆறுதல் கண்டேன். (I felt
rather lonely this morning at breakfast. So I went and unboxed a Shakespeare. There is
my comfort.)

 
     ஷேக்ஸ்பியரின் நூலைப் படிக்கும்போது உனக்கு ஏதாவது ஒரு பகுதி புதிய
உணர்வு ஊட்டியிருக்கும் அல்லவா? நீ எழுதும் கடிதங்களில் எல்லாம் அத்தகைய
பகுதி பற்றி இரண்டொரு குறிப்புக்களை எழுது.