ஷேக்ஸ்பியரைப் படிக்கும்போது அவ்வாறு ஓயாமல் புத்துணர்வு பிறக்க வேண்டும்; ஒரே நாடகத்தை நாற்பது முறை படித்தாலும், புத்துணர்வு பிறந்து கொண்டிருக்க வேண்டும். (Whenever you write say a word or two on some passage in Shakespeare that may have come rather new to you, which must be continually happening, not withstanding that we read the same play for forty times.) |
நான் எப்போதும் நம்பிக்கை இழந்து சோர்வு அடைவதில்லை; ஷேக்ஸ்பியரைக் கற்றுவருகிறேன். உண்மையாகவே நான் வேறு எந்த நூலையும் மிகுதியாகப் படிக்க மாட்டேன் என்று கருதுகின்றேன். ஷேக்ஸ்பியர் ஒருவரே நமக்குப் போதும் என்ற கருத்தில் நான் ஏறக்குறைய ஹாஸ்லிட்டோடு உடன்படுகிறேன். (I never quite despair; and I read Shakespeare-indeed I shall, I think, never read any other book much.... I am very near agreeing with Hazlitt that Shakespeare is enough for us.) |
அகல உழுதது போதும், இனி ஆழ உழுவதே அமையும் என்ற மன நிலை எந்த வயதில் வரும் என்று குறிப்பிடுவதற்கில்லை. சிலர்க்கு அறுபதாவது வயதில் அந்த வளர்ந்த நிலைமை வரலாம்; சிலருக்கு இருபதாவது வயதிலும் வரக்கூடும். கீட்ஸ் என்னும் புலவர்மணிக்கு மிக்க இளமையிலேயே வந்துவிட்டது என்பதை மேற்கண்ட குறிப்புகள் தெரிவிக்கின்றன. |
தமிழில் அகன்ற கல்விக்கு உரிய வகையில் நூல்கள் ஓரளவு உள்ளன; இன்னும் மேன்மேலும் பெருகி வருகின்றன. ஆழ்ந்த கல்விக்கு உரிய வகையில் நூல்களோ போதியவை உள்ளன; முன்னோர்கள் கற்றுக் கற்றுப் பயன் கண்டு போற்றி உணர்த்திச் சென்ற நூல்கள் சில உள்ளன; அவற்றிற்கெல்லாம் மணிமுடியாய் இலங்குகின்றது திருக்குறள். |