பக்கம் எண் :

நல்ல நூல் 31
 
     இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும் போது தொல்லையாகவும்
இருக்கும்; தொடர்ந்து படிக்கப் படிக்க, இன்பம் பயக்கும்; வாழ்நாளில் மறக்க முடியாத
துணையாக இருக்கும்; வழிகாட்டியாக நிற்கும்; மனச்சான்றைப் பண்படுத்தும்; வழுக்கி
விழும் போதெல்லாம் காப்பாற்ற முன்வரும்; நெறி தவறும் போதெல்லாம்
இடித்துரைத்துத் திருத்தும். வாழ்நாளில் உயிரின் உணர்வு போல் கலந்து விடும் ஆற்றல்
அத்தகைய நூல்களுக்கு உண்டு.
 
     ரஸ்கின் என்னும் ஆங்கில ஆசிரியர் நூல்களைப் பற்றி வகைப்படுத்திச் சீர்
தூக்கும் சொற்பொழிவு ஒன்றில் அழகான பாகுபாடு செய்துள்ளார். அந்த மணி
நேரத்துக்கு உரிய நூல் என்றும், எந்தக் காலத்துக்கும் உரிய நூல் என்றும் இரு
வகையாகப் பகுத்துரைக்கின்றார். திருவள்ளுவர் நூலை அவ்வாறு பாகுபாடு
செய்யாவிட்டாலும் நட்பைப் பாகுபடுத்தி உரைப்பதன் வாயிலாக இந்தக் கருத்தைப்
புலப்படுத்தியுள்ளார்; முகம் நகப் பழகும் நட்பு, அகம் நகப் பழகும் நட்பு என்று நட்பை
இருவகை ஆக்கியுள்ளார். அதைக்கொண்டு பொழுதுபோக்குக்கு உரிய நூல் என்றும்,
வாழ்க்கைக்கு உரிய நூல் என்றும் நூலையும் பகுத்து உணரலாம். அவ்வாறு
உணரும்போது, ரஸ்கின் என்னும் ஆங்கில ஆசிரியரின் கருத்தைக் காணமுடிகின்றது.
நல்ல நூல் எது என்பதைத் தேர்ந்தெடுக்கவும் முடிகின்றது. இந்தச் சிறந்த
அடிப்படையைக் கொண்டே, கல்வி என்னும் அதிகாரத்தில் கற்கும் முறையைக்
கூறும்போது திருவள்ளுவர் கற்கத் தகுந்த நூல்களைக் கசடறக் கற்க வேண்டும் என்றும்
கூறியுள்ளார். எல்லா நூல்களையும் கற்பதால் பயனில்லை என்று விளக்கி, கற்பதற்குரிய
நல்ல நூல்களையே தேர்ந்து கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கண்டவரோடு எல்லாம் பழகாமல்,