பக்கம் எண் :

32 இலக்கிய ஆராய்ச்சி
 
பண்புடையாரிடம் மட்டும் நட்புக் கொள்ள வேண்டும் என்ற திருவள்ளுவர்,
நூல்களிலும் கண்டவற்றை எல்லாம் கற்றலாகாது என்றே அறிவுறுத்துகின்றார்.
 
      பண்புடையாரின் தொடர்பைவிட, உயர்ந்த நூற்பயிற்சி மிக்க நன்மை
தருவதாகும். பண்புடையார் உலகில் கிடைப்பதற்கு அரியர். கிடைத்தாலும் இடமும்
காலமும் பிரிக்கும் பிரிவுக்கு உட்பட வேண்டி நேர்கின்றது; அதனால் ஒருங்கே
வாழ்ந்து பழகும் வாய்ப்பு அரிதாக உள்ளது. நல்ல நூலின் தொடர்பு என்றும் நிலையாக
உள்ளது. காலமும் இடமும் நம்மிடமிருந்து அதைப் பிரித்திட முடியாது. மறப்பே பிரிவு
என்னுமாறு, நல்ல நூல் உள்ளத்தில் ஊறி நிற்பது; பயின்ற பிறகு எளிதில் மறக்க
முடியாதது; வேண்டும்போது உள்ளத்தே ஊற்றாய்த் தோன்றி உறுதுணை செய்ய
வல்லது. பண்புடையாரை இவ்வாறு நம்மை விட்டுப் பிரியாதவாறு பிணித்து வைக்க
முடியாது. வாழ்க்கை அத்தகைய சிறுமை உடையதாக இருப்பதால்தான்,
"கல்வியினூங்கில்லை சிற்றுயிர்க்கு உற்றதுணை" என்றார் குமரகுருபரர்.
 
     விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக, இடத்தினால் விளையும் பிரிவை இல்லையாக்கி,
தொலைநாடுகளில் உள்ள நண்பரோடும் பழக முயலலாம்; ஆயின் சில ஆண்டுகளுக்கு
முன்னரோ, சில நூற்றாண்டுகளுக்கு முன்னரோ வாழ்ந்து காலத்தால் பிரிக்கப்பட்ட
சான்றோருடன் பழகுவதற்கு வழி இல்லை. நட்புலகத்தில் உள்ள இந்தக் குறையை
நூலுலகம் தீர்த்துவிடுகிறது. திருவள்ளுவர் இளங்கோ முதலானவர்களுடன் தொடர்பு
கொள்ளாதவாறு காலம் நம்மைப் பிரித்து வைத்த போதிலும், அவர்களின் நூல்கள்
அந்த அரிய தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன. திருக்குறளையும்
சிலப்பதிகாரத்தையும் பயின்றவர்கள், வேண்டும் இடத்தில், வேண்டும்