சாதாரணப் பேச்சையும் புராணப் பிரசங்கத்தையும் சலிப்பில்லாமல் கேட்பார்கள்; நூறாயிரக் கணக்காகக் கூடி மணிக்கணக்காகக் காத்திருந்து நாட்கணக்காகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்; ஆனால், ஆராய்ச்சி உரைகளையோ தத்துவ விளக்கங்களையோ அவர்கள் அவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பார்களா? கற்பனைச் சுவை குறைந்த மட்ட வகையான படங்களைக் கண் இமைக்காமல் பார்த்துக் களிப்பார்கள்; ஆனால், ஓவியத் திறன் அமைந்த நுண் கலையான படங்களை அவ்வாறு கண்டு களிப்பார்களா? வலியக் கொடுத்தாலும் வாங்கிப் போற்றுவார்களா? இழிவான நகைச்சுவைகளை மீண்டும் மீண்டும் நுகர்வார்களே அல்லாமல், அறிஞர் போற்றும் நுட்பமான நகைச்சுவைக் குறிப்புகளை நுகர முயற்சியேனும் செய்வார்களா? திருவிழாக் காலங்களில் கோயில்களுக்குச் செல்லும் போதும் ஆங்காங்கு நெளியும் ஆடம்பரக் காட்சிகளைக் கண்டு மயங்கி நிற்பார்களே அல்லாமல், தொன்று தொட்டு ஒளிரும் சிற்பக் கலைகளைக் கண்டு கலையின்பம் பெறுவார்களா? அந்தக் கலைச் செல்வங்களில் வாழும் உணர்வும் அழகும் எத்தகையவை என்று வியந்து மகிழ்வார்களா? அறிஞர்களோ, போலிகளையும் பகட்டுகளையும் விட்டு இத்தகையான கலைகளைத்தான் நாடுகின்றார்கள்; இந்தக் கலைகளால் பேரின்பம் பெற்று மகிழ்கின்றார்கள். பொதுமக்களையும் அறிஞர்களையும் ஒருங்கே பிணிக்கவல்ல நாடகக் கலையை ஆராய்ந்தாலும் இந்த உண்மையே விளங்குகின்றது. காணும் நாடகங்களில் அறிஞர்களின் உள்ளத்தை நுட்பமான ஆடல் பாடல்கள் கவர்கின்றன; ஆனால், பொதுமக்களோ இடையிடையே காணும் கோமாளிக் கூத்துகளில் உள்ளத்தைப் பறி கொடுத்து அவற்றையே போற்றிப் பேசுகின்றார்கள். | | |
|
|