பக்கம் எண் :

சங்கப் பலகை 37
 
விரும்பும் கலைச்சுவை எத்தன்மையானது என்பதையும் ஆராய்ந்து அந்த
முரண்பாட்டை விளக்குவதே அவருடைய நோக்கம்.
 
     ஆயினும், எப்படியோ சில நூல்கள் தலைமுறை தலைமுறையாகச் செல்வாக்குப்
பெற்று விளங்குகின்றனவே என்று கேட்கலாம். அதற்குக் காரணம் பொதுமக்கள்
விரும்புகின்றார்கள் என்பது அன்று; அறிஞர்கள் விடாமுயற்சியோடு அவற்றைப்
போற்றிப் போற்றிப் பொதுமக்கள் மதிக்குமாறு செய்துவிட்டார்கள் என்றே கூற
வேண்டும். பொதுமக்களிடம் ஆராய்ச்சி அறிவு இல்லை என்றாலும், அதற்கு மாறாகக்
கண்மூடிப் போற்றுதல் உண்டு அன்றோ? அறிஞர்கள் அதைப் பயன்படுத்திக்
கொண்டார்கள். ஆராய்ச்சி இல்லாத இடத்தில் கண்மூடித் தன்மை நிலையாக வாழும்
அன்றோ? "இது நன்மையா, தீமையா, ஆராய்ந்து கொள்ளுங்கள்" என்று சொன்னால்
கேட்காத மக்கள், "இது நல்லது, இது நல்லது, இது நல்லது" என்று விடாமல்
அடுத்தடுத்துக் கூறும் குரல்களைக் கேட்பார்களானால், அதை அப்படியே நம்பி ஏற்றுக்
கொள்வார்கள். 'தீயது தீயது' என்று கூறும் குரல்களைப் பன்முறை கேட்டாலும்
அப்படியே நம்பி ஒதுக்குவார்கள். இந்தத் தன்மை இயல்பாக இருப்பதால் வீரவழிபாடு
என்பது சமய உலகிலும் அரசியல் உலகிலும் அவர்களுக்கு இயல்பாகின்றது.
"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று
பூங்குன்றனார் கூறும் கருத்து, பொது மக்களுக்குப் பயன் தராது. வீரவழிபாடு ஒன்றே
அவர்களை ஆட்டி வைப்பது. அதனால் தன்னலம் உடையவர்கள் சமயத்தின்
பெயராலும் அரசியலின் பெயராலும் அவர்களை ஆட்டி வைக்க முடிகின்றது. இலக்கிய
உலகத்திலும் அதுபோல் ஆட்டிவைக்க முடியும். அப்படி அறிஞர்கள் தலைமுறை
தலைமுறையாகச் செய்த முயற்சியின் பயனாகவே,