பக்கம் எண் :

சங்கப் பலகை 41
 
வேண்டுமென்றே வற்புறுத்திக் கூறுகின்றார்; அவ்வாறு கூறுமிடத்தில் தத்துவப்
பேராசிரியர் கலைஞராக மாறி நின்று உணர்ச்சியோடு தம் கருத்தைப்
புலப்படுத்துகின்றார்; "இசைக்கலையில் என் அனுபவத்தால் நான் அறிந்தது இது;
நாளடைவில் மிகச் சிறந்த இசை என்று இப்போது எனக்குப் புலப்படும் இசைப் பகுதி
எல்லாம், முதல் முதலில் கேட்டபோது எனக்கு வெறுப்பு அல்லது அச்சத்தை
உண்டாக்கத் தொடங்கியது. (I Know from my own experience in music that all the music
which has come to seem to me to be Supremely worthwhile is music which began by
boring or frightening me at the first hearing.)
தயக்கம் இல்லாமல் உடனே ஒன்றை நீ
உணர்ந்து கொள்வாயானால், அது உயர்கலை அன்று என்பது பெரும்பாலும் உறுதி. (If
you can understand it right away, it is almost certainly not great art.)"
 
     தயக்கம் இல்லாமல் உடனே எதையும் சீர்தூக்கி உணரக்கூடிய நிலை ஒன்று
உண்டு. அது பயிற்சியால் கிட்டுவதாகும். வைரக் கற்களைப் பார்த்துப் பார்த்துப்
பயின்றவர்க்கே அவற்றின் குறைநிறை எளிதில் புலப்படும். ஆடு மேய்த்தலையே
தொழிலாகக் கொண்டவர்க்கே ஆடுகளின் சிறப்பும் சிறப்பின்மையும் பார்த்தவுடனே
புலனாகும். அரிசியுணவை உண்டு பயின்றவர்க்கே நல்ல அரிசி எது என்பது
தெளிவாகும். கோதுமையுணவை உண்டு பயின்றவர்க்கே நல்ல கோதுமை இன்னது
என்பது விளங்கும். அவை போல், கலைத்துறையில் பயின்றவர்க்கே உயர்கலை இன்னது
என்பது எளிதில் புலப்படும். கலைகளுள்ளும் எவரெவர் எந்த எந்தக் கலையில் பயின்று
தேர்ந்துள்ளனரோ அந்த அந்தக் கலையில் மட்டுமே அவரவர்க்குச் சீர்தூக்கும் திறன்
வாய்க்கும். ஆகவே கலையை ஆராய்ந்து நுகரும் திறன், நுகர்ந்து பயின்ற பயிற்சியால்
வளர்ந்து அமையும் என்பது உணரத்தக்கது.