இந்தக் கருத்துக்களை எண்ணும்போது உயர்கலை என்பதில் ஒருவகை நுட்பம் அமைந்திருப்பதைத் தெளிவாக உணரலாம். சிறந்த கலைஞரின் கற்பனை மற்ற மக்களின் வாழ்க்கைநிலையை விட உயர்ந்த நிலையில் இருப்பதால், அதை உணர்வதற்காக அந்த எல்லைக்கு உயர வேண்டியிருப்பதையும் உணரலாம். இவ்வாறு நுட்பமாக உணர்ந்து கலையுலகில் உயர்வதற்குப் பொறுமையும் முயற்சியும் வேண்டும்; அதற்கு ஓரளவு காலமும் வேண்டும். இவ்வளவு காலமும் பொறுமையோடு முயன்று ஆராய்ந்தால்தான், சங்கப் பலகையில் இடம் கிடைக்கும்; உயர்ந்த நூலைப் போற்றும் தகுதி ஏற்படும். அவ்வாறு சங்கப் பலகையில் இடம் பெற்ற அறிஞர்கள், ஆராய்ச்சியுடன் போற்றி நூலின் நயம் காணக் காணத் தம்மை மறந்து தம் நிலையையும் மறந்து நூலின் பெருமையில் முழுகிவிடுகின்றனர்; சங்கப் பலகையை விட்டுக் கவிழ்ந்து அதைத் தாங்கும் பொய்கையில் முழுகிவிடுகின்றனர். இவ்வாறு அறிஞர் பலர் தலைமுறை தலைமுறையாக உயர்ந்த நூலுக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்வதால்தான், தம் பெருமையை எல்லாம் சுருக்கிக்கொண்டு நூலின் பெருமை ஒன்றையே விளங்கவைப்பதால்தான், சங்கப் பலகையில் தம் இடம் எல்லாம் விட்டு உயர்ந்த நூல் மட்டும் விளங்கச் செய்வதால்தான் அத்தகைய நூல் அழியா வாழ்வு பெறுகின்றது. உலகத்தில் இன்று உள்ள உயர்ந்த நூல் எல்லாம் இவ்வாறு எத்தனையோ அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு அவர்களுடைய வாழ்வை எல்லாம் தம் புகழில் கலந்து மூழ்கிவிடச் செய்திருக்கின்றன. | | |
|
|