பக்கம் எண் :

44 இலக்கிய ஆராய்ச்சி
 
வகைகளையும் கண்டறிந்தே உலகம் பலவகை என்று கூறியுள்ளார்.
 
     இலக்கியம் ஒரு கலை; கலைகளில் சிறந்த கலை. உள்ளத்தின் உணர்ச்சியே
கலைவடிவமாக அமைவது, இலக்கியம் என்பது உள்ளத்து உணர்ச்சியைச் சொற்களால்
தீட்டும் ஓவியம் என்று கூறலாம். ஆகவே, உள்ளத்தின் உணர்ச்சி வேறுபாட்டிற்கு ஏற்ப,
இலக்கியம் பல்வேறு வகையாக வேறுபட்டு நிற்கும். இலக்கியம் இன்ன என்று கூற
வந்தவர்களும், பொதுவான அடிப்படைகளை விளக்கிச் சொல்ல முடிந்ததே தவிர,
இலக்கியத்தின் வகைகளையும் உட்பிரிவுகளையும், வரையறுத்து நிறுத்த முடியவில்லை.
இதனால்தான் நாட்டுக்கு நாடு வேறு வேறாகவும், நூற்றாண்டுக்கு நூற்றாண்டு வேறு
வகையாகவும் இலக்கியம் வளர்ந்து வாழக் காண்கின்றோம்.
 
     இலக்கியத்தின் அமைப்புக்கு, பாடப்பட்ட காலத்தின் உணர்ச்சிப் பொதுக்
காரணம்; பாடியவரின் உள்ளத்தின் உணர்ச்சி சிறப்புக் காரணம். உள்ளம்
பலவகைப்படுவதால் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் எழுந்த நூல்களிலும் இலக்கிய
வேறுபாடுகள் காணலாம்.
 
     இலக்கியத்தில் இவ்வாறு காணப்படும் வேறுபாடுகளை விட, இலக்கிய
ஆராய்ச்சியில் காணப்படும் வேறுபாடுகள் மிகப் பல. இது இயற்கை. இலக்கியத்தின்
அடிப்படையை வளர்த்தவை, அந்தக் கால நிலையும் பாடியவரின் உள்ள நிலையுமாகும்.
ஆனால், இலக்கிய ஆராய்ச்சியில் வேறு இரண்டு காரணங்கள் புகுகின்றன. அவை
ஆராய்வோரின் காலநிலையும், அவருடைய உள்ள நிலையுமாகும். ஆகையால் ஒரு
காலத்தின் விளைவை மற்றொரு காலத்தின் எல்லையிலிருந்து பார்ப்பதாலும்,
பாடியவரின்