உணர்வுத் திறத்தை ஆராய்வோர் தம் உணர்வு கொண்டு நோக்குவதாலும் வேறுபாடு பெருகுகின்றது. |
இலக்கியம் காலநிலைகளால் வேறுபடாத தன்மை உடையது என்றும், யார் யார் கற்றாலும் ஒருவகைக் கற்பனை எல்லையிலிருந்து கண்டால்தான் உணரத்தக்கது என்றும் கூறி, இலக்கியத்தின் ஒருமையை வற்புறுத்திக் கூறுவோரும் உண்டு. இலக்கியத்தின் அடிப்படை ஒரு தன்மையானது என்பது உண்மைதான். ஆனால், அந்த அடிப்படை ஒன்றே இலக்கியம் ஆகாது. அப்படி ஆகுமானால், பலவேறு காலங்களில் புலவர்கள் தோன்றிப் பலவேறு நூல்கள் எழுத வேண்டிய காரணம் இல்லை அன்றோ? ஆகையால் அடிப்படை ஒத்திருந்தாலும், பல வகை வளர்ச்சியால் பெருகும் வேறுபாடுகள் பல என்பதை உணர வேண்டும். |
அடிப்படை மட்டும் அல்லாமல் நிலையும் தோற்றமும் என்றும் ஒரே தன்மையாய் உள்ளது இமயமலை. அதைச் சென்று காண்போர் பலர். காண்போர் எழுதும் நூல்கள் ஒரே தன்மையாக உள்ளனவா? இல்லை. அந்த நூல்களைக் கற்பவரும் பலரும் இமயமலையைக் காணாமலே, இவ்வாறு இருக்கக்கூடும் என்று கற்பனை செய்தல் இயல்பே அன்றோ? அவர்கள் காணும் கற்பனைகளாவது ஒத்திருக்க முடியுமோ? முடியாது. |
இலக்கியத்தின் பொதுத்தன்மை அப்படிப்பட்டதே. அது ஓர் இமயம். அதைப் பலவேறு காலங்களில் பலவேறு சூழலிலிருந்து பற்பலர் காண்கின்றனர். அவர்களுடைய காட்சிப் பொருள் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் கண்டு உணரும் உணர்ச்சி ஒத்திருக்க முடியாது; அவர்களுடைய உணர்ச்சியைப் பெற முயலும் மற்றவர்களின் உணர்ச்சியும் ஒத்திருக்க முடியாது. |