பக்கம் எண் :

உள்ளம் பலவகை 47
 
நினைவுக்கு வருகின்றது. 'இலக்கிய ஆராய்ச்சி என்பது நூலுலகத்தில் நுழைந்து மனித
உள்ளம் ஆற்றும் அஞ்சாத செயல்கள்,' என்பது அவருடைய கருத்து. ஒருவருடைய
உள்ள நிலையையும் நம்பிக்கைகளையும் அவனே எடுத்துக் கூறுவதால் அறியலாம்;
அவனுடைய ஆராய்ச்சியுரைகளில் அவை மேலும் நன்றாக விளங்கக் காணலாம் என்று
ஜான்முரி என்னும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றார். ஆதலின் நூலாராய்ச்சியில்
நூலாசிரியரின் உள்ளம் விளங்குவது ஒரு பக்கம் இருக்க, ஆராய்ச்சியாளருடைய
உள்ளமே தெளிவாக விளங்குகின்றது எனக் கொள்ள வேண்டும்.
 
     இந்த உண்மை விளங்கியவர்க்கே ஆராய்ச்சிக்கே உரிய தகுதி ஏற்படுகின்றது
எனலாம். உலகம் பலவகை என்று உணராத ஒருவன் தனக்கு விருப்பமான பகுதியில்
கலந்து வெறுப்பான பகுதியில் ஒதுங்கியும் வாழ முற்படுவான்; அவன் உலகின் ஒரு
மூலையில் வாழலாம்; உலகை ஆராய முடியாது. அவ்வாறே இலக்கிய ஆராய்ச்சியும்
வெவ்வேறு வகையாக அமையக் கூடும் என்ற உண்மை உணராதவரும், ஆராய்ச்சியில்
தலைப்படுவதற்கு முன்பே தவற நேரும், அவரும் தமக்குப் பிடித்த ஒருவகை
இலக்கியத்தைக் கற்க முடியும்; பிடிக்காத மற்றொரு வகை இலக்கியத்தை வெறுக்க
முடியும்; நடுநிலையாக நின்று எதையும் ஆராய முடியாது.