முனைகின்றார். இருவரும் தத்தம் எல்லைகளை விட்டு நெருங்கி வந்து காரணம் காண முயல்வதே இல்லை. | ஒரு சத்திரத்தில் இருண்டதோர் இரவில் தெலுங்கர் ஒருவரும் தமிழர் ஒருவரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனராம். ஒரு தூக்கம் தூங்கி விழித்ததும் தெலுங்கர் தம் குடையை நினைத்துக்கொண்டு படுத்தபடியே தடவினராம். அந்தக் குடை பக்கத்திலிருந்த தமிழரின் தலைப்பக்கத்தில் இருந்தது. குடையைத் தடவியவர் அதை இழுத்ததும் தமிழரின் காதில் அது அகப்பட்டுக்கொள்ள, அவர் "காது, காது" என்றாராம். தமிழ் தெரியாத அந்தத் தெலுங்கர் குடையை அந்த ஆள் தர மறுப்பதாக எண்ணி "நாதி, நாதி" என்று மறுபடியும் இழுத்தாராம். இருவர்க்கும் சினம் மூண்டு குழப்பம் ஏற்பட்டதாம். இப்படி ஒரு கதை வழங்குகின்றது. 'காது' என்ற தமிழ்ச் சொல்லிற்குத் தெலுங்கில் 'அல்ல' என்பது பொருள். அதனால் "உன் குடை அல்ல அல்ல" என்று தமிழர் சொன்னதாகத் தெலுங்கர் எண்ணிச் சினம் கொண்டாராம். தமிழரோ தம்மை அவர், "நாதி, நாதி" என்று சொல்லித் திட்டுவதாகச் சினம் கொண்டாராம். | அவர் சொன்னது இவர்க்கு விளங்கவில்லை. இவர் சொன்னதோ அவர்க்கு விளங்கவில்லை. ஆனால் இருவரிடையே குழப்பம் ஏற்படுத்துவதற்குக் குடை காரணமாக இருந்தது. இன்று நம் நாட்டில் பாட்டுப் படும்பாடு இதுதான். அவர் புகழ்வதை இவர் பழிக்கின்றார். இவர் புகழ்வதை அவர் பழிக்கின்றார். ஆனால் அவரும் இவரும் கூடித் தம் தம் காரணத்தை ஆராய்வதில்லை. விளக்கு இல்லாத இருண்ட சத்திரமாக இலக்கிய உலகம் உள்ளது. கற்பனை வளம், ஓசையின்பம், உணர்வுச் சிறப்பு ஆகிய காரணங்களை ஆராய இந்தச் சத்திரத்தில் வாய்ப்பும் இல்லை; வழியும் இல்லை. ஆராய முடிந்தால் காதும் நோகாது; கையும் வலிக்காது; பொருளும் உரிய இடத்தில் வாழும். | | |
|
|