பக்கம் எண் :

  8. கலைஞனின் தியாகம்
 
     சமையல் தொழிலில் தேர்ந்த தாய் அதை ஒரு தொண்டு என்றே கருதி
வாழ்கின்றாள். சமையல்காரனுக்கோ அது ஒரு தொழிலாக - பிழைக்கும் வழியாக -
இருக்கின்றது. நாவிற்கு இனிய சுவைமிக்க பண்டங்களை வேளைதோறும் செய்து தரத்
தாய்க்குத் தெரியும்; அரிசிச் சோற்றையும் சுவை குறைந்த காய்கறிகளையும் சமைக்காமல்
விட்டு, இனிப்பும் காரமுமான சிற்றுண்டிகளை மட்டுமே செய்து குவிக்கத் தெரியும்.
ஆனால், சமையலைத் தொழிலாகக் கொள்ளாமல் தொண்டு என்று கடைப்பிடிக்கும்
நெஞ்சம் இருப்பதால், தாய் அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் அருமைத் தாய்
சிற்றுண்டிக் கடைக்காரனோடு போட்டியிட முடியவில்லை. தாயின் குறிக்கோளாக நிற்பது
தன் மக்களின் வாழ்க்கை. சிற்றுண்டிக் கடைக்காரனின் நோக்கம் தன் வாழ்க்கையே.
மக்கள் உடல்நலமும் உரமும் பெற்று வளர வேண்டும் என்று தாய் தொண்டு
செய்கிறாள். தன் வயிறும் பெட்டியும் நிரம்பவேண்டும் என்று கடைக்காரன் தொழில்
செய்கிறான். ஆகையால் தாய் அவனோடு போட்டியிட்டு வெல்ல முடியாது; ஆனால்,
பொறுமையுடன் கடமையைச் செய்து உதவ முடியும்.
 
     மக்கள் தம் வாழ்க்கையைப் பற்றிக் கவலை இல்லாமல், நாவின் சுவையையே
போற்றிக்கொண்டு வளர்கின்றார்கள். இயற்கை அவர்களை வளர விடுவதில்லை; நோய்