அடுத்த தலைமுறையிலேயே அவை இருக்குமிடம் தெரிவதில்லை. | இழிவகையான நாடகம் முதலியவற்றில் சுவை மிகுந்து இருப்பது உண்மையே. கடையிலுள்ள இனிப்புப் பண்டங்களைப் போல் சுவை ஒன்றாலேயே மக்களுக்குக் கவர்ச்சியூட்ட வேண்டுமென்று ஆக்கப்பட்டவை அவை. இழிந்த காட்சிகளையோ கருத்துக்களையோ சொற்களால் வடிக்கும் போது, இழிவான நகைச்சுவை நிரம்பியிருக்கச் செய்வது எளிது. உயர்வகையான காட்சிகளிலும் கருத்துக்களிலும் உயர்வான நகைச்சுவையை நுகர்வதற்கு ஒருவகைப் பயிற்சியும் உணர்வின் பண்பாடும் வேண்டும். அத்தகைய பயிற்சியும் பண்பாடும் இல்லாதவரே உலகத்தில் பலராக உள்ளனர். ஆகையால் பெரும்பாலோரான அவர்களின் உள்ளத்தைக் கவரவேண்டும் என்று எழுதப் புகுவோர் இழிவகையான கலைக்கே எளிதில் இறங்குவார்கள். ஆனால், கலையின் வாயிலாகத் தொண்டு செய்ய வேண்டும் என்று தாயுள்ளம் கொண்ட கலைஞரோ, தம்மை விரும்பி வருவோரின் வாழ்வுக்குத் துணை செய்வதே கடமை என்று உயர்வகையான கலையைப் படைத்துக் காத்திருப்பார்கள், சுவை குறைவதைக் குறித்தும் கவலைப்படாமல் கடமையைச் செய்வார்கள். | நகைச்சுவை மட்டும் அன்று; மற்றச் சுவைகளும் அப்படிப்பட்டவைகளே. மட்டமான காட்சிகளிலும் கருத்துக்களிலும் அமையக்கூடிய அவ்வளவு எளிதில், உயர்வகையான காட்சிகளிலும் கருத்துக்களிலும் சுவைகள் அமைவதில்லை. இதனால் அறிஞர் சிலர் கலையில் காணும் எந்தச் சுவையும் அருமைப்பாடும் நுட்பமும் உடையதாக இருக்க வேண்டும் என்றும், நுட்பமற்றதாய் எளிதாய் உள்ள எதுவும் கலையாகாது என்றும் வரையறுக்க | | |
|
|