பக்கம் எண் :

60 இலக்கிய ஆராய்ச்சி
 
போற்றாமல் புறக்கணித்தாலும் வெறுப்பும் சினமும் கொள்ளாமல் தொண்டு ஆற்றும்
அவளுடைய தியாக உணர்வு போற்றத் தக்கது.      
 
     பண்பட்ட வாழ்க்கையையே நோக்கமாகக் கொள்ளும் உயர்ந்த கலைஞரும்
அத்தகைய தியாகமே செய்கின்றனர். பொழுது போக்க உதவும் இழிவகையான கலைக்கு
உள்ள கவர்ச்சியையும் மதிப்பையும் நன்றாக அறிந்தும், பொறுத்திருந்து தம் கடமையில்
தளராமல் தொண்டு செய்வதற்குத் தியாக உணர்வே காரணம். வீடு வாசல்
முதலியவற்றைத் துறப்பதும் எளிது; பட்டம் பதவி முதலியவற்றை துறப்பதும் எளிது.
ஆனால், புதிது புதிதாகப் படைக்குமாறு தூண்டும் உணர்வு மிக்க கலைஞன் தன்
கலைத்திறன் உடனடியாகப் பயன்படாமை கண்டும் பொறுத்திருப்பதே பெரிய தியாகம்;
இழிவகையான கலைப் பகுதிகளைச் சுவை மிக்கனவாக எளிதில் படைக்கத் தன்னால்
முடியும் என்று அறிந்திருந்தும், அந்த ஆற்றலைத் துறந்து பொறுத்திருப்பது
உண்மையாகவே பெரிய தியாகமாகும். மட்டமானவை கவர்ச்சியூட்டி மக்களைத்
திரட்டுவதைத் தன் கண்ணால் கண்டும், அறத்திறன் ஆட்சியில் நம்பிக்கை கொண்டு
பொறுமையுடன் இருந்தும் உயர்வகையான கலையைப் படைப்பதற்கு இத்தகைய
தியாகமே அடிப்படையாகும்.