துன்பம் மக்களின் பொதுவுடைமை; ஆயினும் துன்பம் எய்தும்போது அதைப் பல்வேறு வகையான மக்கள் உணர்கின்றார்கள். துன்ப உணர்வு பலவகையாக இருப்பினும், துன்பம் அவர்களின் உள்ளத்தின் ஆழத்தை உள்ளவாறு காட்டவல்லதாக இருக்கின்றது. கலைஞர் அல்லாத மற்ற மக்கள் துன்பத்தை உணர்வதோடு நின்று விடுகின்றனர். கலைஞரோ, தாம் துன்பம் உணர்வதோடு நிற்காமல் உணரும் துன்பத்தை ஆழ்ந்து காண்கின்றனர்; அந்த அனுபவத்தைக் கொண்டு மற்றவர்களின் துன்பத்தையும் ஆழ்ந்துணர்கின்றனர். அவ்வாறு உணர்ந்து உலகிற்கு உணர்த்திய பெருமக்களே இளங்கோவடிகள் முதலானோர். மக்களுள் பெரும்பாலோர் உலகம் என்னும் நாடக அரங்கில் நடித்த பின் பயன் அறியாமல் மறைந்து போக, கலைஞர் பெருமக்களோ தாம் நடிப்பதோடு பிறர் நடித்தலையும் கண்டு உணர்கின்றனர். அந்த அரிய உணர்வின் பயனாக, உலகுக்குக் கலைச் செல்வத்தை ஆக்கி அளிக்கின்றனர். | வாழ்க்கையில் நேரும் துன்பத்தை மக்கள் அனைவரும் வெறுக்கின்றனர். ஆயினும் கலைவடிவு பெறும் துன்பத்தை எவரும் வெறுப்பதில்லை. வீட்டிலும் நாட்டிலும் துன்பத்தைத் துடைக்க முயலும் மனம் பாட்டிலும் நாடகத்திலும் துன்பத்தை வரவேற்கின்றது. ஆய்ந்து நோக்கினால், காவியம், ஓவியம், இசை, நாடகம் | | |
|
|