குரலைக் கேட்கவும், துன்பத்தால் கசிந்து கண்ணீர் விடவும் எவரும் தயங்குவதில்லை. இவ்வாறு வாழ்க்கையில் தடுக்க முயலும் ஒன்றைக் கற்பனையில் விரும்பி வரவேற்பதற்குச் சிறந்த காரணம் இருக்க வேண்டும். அத்தகைய காரணம் என்ன? | வாழ்க்கையில் துன்பம் காணும்போது துன்பத்திலிருந்து தப்பி ஓட அலைகிறோம்; நண்பனுக்குத் துன்பம் வரும்போது அவனைத் துன்பத்திலிருந்து காத்து உதவ அலைகிறோம்; தப்பும் முயற்சி பயன்படாத போது முன்னிலும் மிகுதியாக வருந்துகிறோம். ஆனால் கலையுலகில் துன்பம் காணும்போது அவ்வாறு தப்பி ஓட வேண்டும் என்று எண்ணுவதில்லை; அலைவதில்லை; கலையுலக மாந்தர்களான தலைவன் தலைவி முதலானவர்களைக் காப்பாற்ற முயலுவதில்லை; காப்பாற்ற வேண்டிய நிலையில் அவர்களும் இல்லை. உணர்ந்து உருகும் அளவில் நம் மனம் நிலைபெறுவதால் அலைவு இல்லாமல் அமைதியே விளைகின்றது. எண்ணங்கள் பலவாய்ப் பிரிந்து கவலைப்படுவதில்லை; ஒன்றுபட்டு உணர்வில் கலக்கின்றன. அதனால் துன்பக் கலை உள்ளத்திற்கு அமைதி நல்குகிறது. வழி ஒன்றாக அமையாமல் இரண்டு மூன்றாகப் பிரியும் இடத்தைக் 'கவலை' என்பது பழைய வழக்கு. எண்ணங்களும் அவ்வாறு பிரிந்து அலைவதையே கவலை என்று குறிப்பிடுவர். அவ்வாறு அலையாத கவலையற்ற நிலை இந்தக் கலையுணர்வில் உள்ளது. வாழ்க்கையில் கவலையை வளர்க்கும் துன்பம், கலையுலகில் கவலையைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. அதனால்தான் வாழ்க்கையில் கனவிலும் வேண்டத் தகாததாக உள்ள துன்பம், கலையுலகில் எட்டுச் சுவைகளுள் ஒரு சுவையாகப் போற்றப்படுகின்றது. கலையுலகில் இன்பமும் ஒரு சுவை; துன்பமும் ஒரு சுவையே; உவகையைவிட அவலமே சிறந்த சுவையாகும். | | |
|
|