பக்கம் எண் :

64 இலக்கிய ஆராய்ச்சி
 
  நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

(தொல்: மெய். 3)
 

என்று தொல்காப்பியனார் எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாக அழுகையைக் கூறியுள்ளார்.
அதனையே பிற்காலத்தவர் அவலச் சுவை என்றனர். அழுகை, அவலம், துன்பம்
என்றெல்லாம் பெயர் பெறும் ஒன்று, சுவை என்று போற்றப்படுமாறு அதையே கலை
மாற்றியமைக்கின்றது. வாழ்க்கையில் வரும் துன்பம் மன ஒருமைப்பாட்டைக்
குலைப்பதும், கலையுள் அமையும் அவலச் சுவை ஒருமைப்பாட்டை விளைப்பதுமே
இதற்குக் காரணமாகும்.
 
     மற்றொரு காரணம் கூறுவாரும் உளர். ஒருவர் உள்ளத்தில் பதிந்துள்ள இன்ப
உணர்வை எவ்வாறேனும் எவரிடத்திலேனும் முழுவதும் வெளிப்படுத்த வேண்டும் என்ற
தூண்டுதல் உள்ளத்தில் அவ்வளவாக இல்லை. ஆனால், துன்ப உணர்வை
எவ்வாறேனும் எவரிடத்திலேனும் வெளிப்படுத்த உள்ளம் ஓயாமல் தூண்டுகின்றது.
இன்ப உணர்வு வெளிப்படாமல் உள்ளத்தில் தேங்கி நிற்பதால் தீங்கு ஒன்றும் இல்லை.
நன்மையே உண்டு. ஆனால், துன்ப உணர்வு அவ்வாறு வெளிப்படாமல் உள்ளத்தில்
தேங்கினால், உள்ளம் தாங்க முடியாமல் முறியும்; உடல் நைந்து கெடும். ஆகையால்,
உள்ளம் கலந்த ஒருவரைத் தேடி அவரிடம் துன்ப உணர்வைக் கொட்ட
முயல்கின்றோம். மெய்யுணர்வாளர் இதற்கு விதி விலக்கானவர். ஆனால், காரணம்
வேறு. அவர்கள் துன்ப உணர்வுக்கு உள்ளத்தில் இடம் தருவதே இல்லை. துன்பம்
அவர்களுக்கு நேர்கின்றது; ஆனால், அவர்களின் உள்ளத்தைத் தாங்குவதில்லை.
இன்பமும் துன்பமும் அவர்களுக்கு உண்டு. இன்பத்துள் இன்பம் விழையாமலும்,
துன்பத்துள் துன்பம் உறாமலும் வாழும் ஆற்றல்