பக்கம் எண் :

 கலையும் கண்ணீரும் 65
 
அவர்களுக்கு உண்டு. ஆதலின் அவர்களின் நிலை வேறு. மற்றவர்கள் இவ்வாறு தம்
துன்ப உணர்வை வெளிப்படுத்தவே உள்ளம் கலந்த நண்பரை நாடுகின்றனர்.
உண்மையாக உள்ளம் கலந்த நண்பர்களோ கிடைத்தற்கு அரியர். கிடைத்தற்கு எளிதாய்
உள்ளது கலையுலகம். துன்பக் கலையின் வாயிலாகத் துன்ப உணர்வை வெளிப்படுத்தி
உள்ளத்தின் சுமையைக் குறைப்பது எளியது. அவலச் சுவை நிரம்பிய காவியம் கற்றல்,
அவலச் சுவையான இசை கேட்டல், துன்ப நாடகம் காணல் முதலியவற்றால்
உள்ளத்தின் துன்ப உணர்வு முழுவதுமாக வெளிப்படுகின்றது. கலையுலகக் கற்பனையான
தலைவன் தலைவி முதலானோரிடம் துன்ப உணர்வெல்லாம் பாய்ந்துவிடுவதால்,
உள்ளம் திறந்தவெளி ஆகின்றது. எத்தகைய ஆழ்ந்த துன்பமும் உள்ளத்தில் ஒதுங்கி
இருப்பதற்கும் ஒளிந்திருப்பதற்கும் இடம் இல்லை. இவ்வாறு உள்ளத்தின் சுமையைக்
குறைப்பதற்கு நண்பர் போல் உறுதுணை செய்வது அவலச் சுவை அமைந்த கலையே
ஆகும். பண்புடைய நண்பரின் தொடர்பையும் நல்ல நூலின் பயிற்சியையும்
திருவள்ளுவர் ஒப்பிட்டுக் கூறிய உண்மை இங்குக் கருதத் தக்கது. ஆகவே, துன்பச்
சுமையைக் குறைப்பதில் நண்பரின் உதவியைப் போல் காவியம் முதலியவற்றின்
உதவியும் சிறந்தது எனலாம்.
 
     ரிச்சர்ட்ஸ் (I.A. Richards) என்னும் ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளர் வேறொரு
வகைக் காரணம் கூறி, கலையுலகில் துன்பம் விரும்பத் தக்கதாக இருப்பதை
விளக்குகிறார். ஒவ்வாத நேர்மாறான பண்புகள் அவலச் சுவையில் ஒத்தனவாய்
இயைந்து அமைந்துள்ளன. அணுகுவதற்கு உரிய இரக்கம் என்னும் உணர்ச்சியும்,
அகல்வதற்கு உரிய அச்சம் என்னும் உணர்ச்சியும் அவலச் சுவையில் ஒருங்கு
இயைக்கப்படுகின்றன. இத்தகைய இயைபு வேறு எங்கும் இல்லை. இவைபோல வேறு