பக்கம் எண் :

68 இலக்கிய ஆராய்ச்சி
 
மனிதன் அமைதியாக இருந்து அதையே கலையாக வடித்து மாற்றுகின்றான் என்று
தெளிவாக்குகின்றார்.
 
     இவ்வாறு வாழ்க்கையை ஒட்டி அமைவதே கலை. ஆயினும் வாழ்க்கை வேறு,
வாழ்க்கையின் பயனாக இன்பம் என்றும், துன்பம் என்றும் இரண்டு உள்ளன. ஆனால்,
கலையில், இன்பம் என்பது ஒன்றே பயனாக உள்ளது. வாழ்க்கையில் துன்பமாக உள்ள
ஒன்றே கலைவடிவு பெறும்போது தூய இன்பமாகப் பயன் தருகின்றது. இரும்பைப்
பொன்னாக்கும் இரசவாத வித்தையை விட, கண்ணீரைக் கலையாக மாற்றும் இந்த
வித்தை வியத்தற்குரியது. வாழ்க்கையில் வரும் துன்பக் கண்ணீருக்கு மாற்றாக, அந்த
கண்ணீரையே இன்பக் கலையாக்கிப் பயன்படுத்தும் கற்பனைத் திறன் வாழ்க!