பக்கம் எண் :

70 இலக்கிய ஆராய்ச்சி
 
முடிந்துவிட்டது. ஆனால், திருக்குறளும் நாலடியாரும் அந்தக் கடைகளில் என்றும்
விற்கப்படுகின்றன. 1939-ஆம் ஆண்டிலும் அந்தப் பழம் புத்தகங்கள் ஒரு மூலையில்
ஒதுங்கி அமைதியாக இருந்தன. இன்றும் அவை அவ்வாறே உள்ளன. 1959-ல் மட்டும்
அல்ல. கி.பி. 2959-ஆம் ஆண்டிலும் குஜிலிக்கடை என்று ஒன்று சென்னையில்
இருக்குமானால், அப்போது வெளியாகும் புதிய நூல்களுக்கு இடையே இந்தப் பழம்
பெருஞ் செல்வங்கள் அழியா வாழ்வு பெற்று விளங்கிக் கொண்டேயிருக்கும்.
 
     புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பும்போது பார்த்தால், அவைகள் ஊரெல்லாம் பரவி
என்ன என்ன அமர்க்களம் செய்திடுமோ என்று தோன்றும்; பூவைக்கும் கிளிக்கும்
இடம் இல்லாதவாறு ஈசல்களே எங்கும் பரவிடுமோ என்று தோன்றும்; அவ்வளவு
வேகமான வளர்ச்சியும் முயற்சியும் அவைகளுக்கு அமைந்துள்ளன. ஆனால்
புற்றீசல்களின் வாழ்வையும் பூவை, கிளி போன்றவற்றின் வாழ்வையும் ஒப்பிட்டு
அறிந்தவர்களுக்கு உண்மை தெரியும். புற்றீசல்கள் தோன்றும்போது உள்ள வேகம்.
அழியும் போதும் உள்ளது. அவை எளிதில் தோன்றி வளர்வது போலவே எளிதில்
அழிந்து மறைகின்றன. கிளி, பூவை போன்றவைகளை அழிக்க வேறொரு பகை
வேண்டும். ஆனால் புற்றீசல்களின் அழிவுக்குப் புறத்தே ஒரு பகை வேண்டியதில்லை;
தாமாகவே இறக்கை அற்று விழுந்து மாயும் தன்மை அவைகளுக்கு இயல்பாய்
அமைந்துள்ளது.
 
     போலி நூல்களின் வாழ்வும் இப்படிப்பட்டதே. அவை அழிவிற்கும் புறப்பகை
வேண்டியதில்லை. தாமாகவே படிப்போரும். வாங்குவோரும் அற்று வீழ்கின்றன.
வாரத்திற்கு நூறு, இருநூறு என்று போலி நூல்கள் புறப்படலாம் அவற்றின் வாழ்க்கை
"செம்புற்றீயல் போல ஒரு பகல் வாழ்க்கை" என்று கூறத்தக்க வாழ்க்கையே. இன்று
நூற்றுக் கணக்காகத் தோன்றுகின்ற அப் புத்தகங்கள்