பக்கம் எண் :

72 இலக்கிய ஆராய்ச்சி
 
இல்லாதவர்களாய் வாழும் மக்களிடம் 'நன்றியுணர்வு' என்னும் நற்பண்பு
இல்லாதிருப்பதற்குக் காரணம் இதுவே. ஆகவே, அவர்கள் தம்மவரைப் போற்றும்
நன்றியுணர்வு இல்லாமல் தம்மவர்க்கே கேடு செய்வதில் முனைகின்றார்கள். இதன்
பயனாகத் தம்மைத் தாமே எளிதில் அழித்துக் கொள்ள முடிகின்றது. புற்றீசல்போல்
பண்பாடு இல்லாத நூல்களும் தாமே அழியும்படியாக அறம் அமைத்துள்ளது.
இவைகளுக்குப் புறப்பகை வேண்டா; தமக்குத் தாமே பகையாய் மாள்வதே இவைகளின்
இயற்கை.
 
     தீயவர்களின் அழிவுக்கும் தீய புத்தகங்களின் அழிவுக்கும் தொடர்பு என்ன என்று
கேட்கலாம். 'நன்றியுணர்வு' என்னும் உயர்ந்த பண்பு இல்லையானால் உயர்வே இல்லை
என்று திருவள்ளுவர் கூறியது மக்களுக்கு மட்டும் அல்ல, அவர்களின் தொடர்பு
கொண்ட புத்தகங்கள் அமைப்புகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
 
  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

(திரு. 110)
 

என்னும் மறைமொழி அறத்தின் ஆட்சியை வலியுறுத்தும் மெய்மொழியாகும். ஒரு நாடு
மேலான நிலையிலிருந்து விழுந்தது என்றால், வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிக்
கொண்டு காரணம் காண முயல்வதில் பயன் இல்லை; அந்நாட்டு மக்கள் நன்றி
கெட்டவர்கள் என்று சுருங்கக் கூற வேண்டும். ஒரு சமுதாயம் அல்லது குறிப்பிட்ட ஓர்
இனம் அழிகின்றது என்றாலும் அதே காரணம் கூறவேண்டும். ஒரு நாட்டில்
இருந்துவந்த ஒருவகை அமைப்பு அழிந்தது என்றாலும் அதற்கும் அதேகாரணம் தான்
கூறவேண்டும். இவ்வளவு ஏன்? சீரும் சிறப்புமாக இருந்து வந்த தமிழ் நாடு சில
துறையில் வீழ்ச்சி யுற்றிருக்கின்றது என்றால், அந்த அந்தத் துறையில் நன்றி கெட்ட
மக்கள் இருந்திருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். சில துறைகளில் தமிழ் நாடு
முன்னேறி