கற்று உணரும் மனம் வேறு. மதனகாமராஜ லீலைகளைப் படிக்கும் மனத்திற்கு அகநானூறு வேம்பாகவே கைக்கும். ஆயினும், மதனகாமராஜ லீலையைப் படித்த ஆயிரக் கணக்கானவர்கள் அதை எளிதில் மறந்துவிடுகிறார்கள். அகநானூற்றைப் படித்தவர்கள் ஒரு சிலராகவே இருந்தாலும் அதை மறப்பதே இல்லை. அகநானூற்றுப் பாடல்களைப் பாடிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன; தொகுத்தும் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன; ஓலை வடிவிலே வாழ்ந்தகாலத்திலும் அப்பாடல்கள் பழுது படாமல் காக்கப்பட்டு வந்தன; பலரால் அல்ல, ஒரு சிலரால்தான். அச்சுவடிவில் வாழும் காலத்திலும் போற்றிக் காக்கப்படுகின்றன; இன்று பலரால் அல்ல, ஒரு சிலரால்தான். ஆனால், அந்த ஒருசிலர் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் உலகம் வறண்டாலும் ஊற்று நீரால் உலகு ஊட்ட வல்ல காவிரி போன்ற உணர்வு உடையவர்கள்; ஆழ உணர்ந்து போற்றும் நெஞ்சம் உடையவர்கள்; தம் வாழ்க்கையே அழிவதானாலும் செய்ந்நன்றி மறக்காமல் போற்றுகின்றவர்கள்; தம் நெஞ்சத்தைப் பண்படுத்திய இலக்கியத்தைத் தம் உயிர் போல் போற்றுகின்றவர்கள்; தாம் அந்த இலக்கியத்தால் பெற்ற பெருவளனை வழிவழியாக வருவோரும் பெறுமாறு ஆற்றுப் படுத்திச் செல்கின்றவர்கள்; ஆரவாரங்களுக்கு இடையே அமைதியாகத் தம் கடைமையைச் செய்யும் தீரர்கள்; கதையில் வரும் ஆமை போல், கொண்ட குறிக்கோளை மறக்காமல் உறங்காமல் மெல்ல நகர்ந்தவாறு முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் கடமையுணர்வு உடையவர்கள்; தன் வேகத்தைத் தானே செருக்கோடு மதித்துக் கொண்டு சிறிது நேரம் துள்ளி ஓடிப் பிறகு உறங்கி அடங்கித் தோல்வியடையும் முயல் போன்றவர்கள் அல்லர். இத்தகையவர்களின் நன்றி மறவா நெஞ்சத்தில் ஊறிச் சுரப்பதால்தான். உயர்ந்த நூல்கள் வழிவழியாகப் போற்றப்பட்டு வாழ்கின்றன. | | |
|
|