பக்கம் எண் :

11. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  
 
     குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களின் மேல் விருப்பம் மிகுதி. எல்லா
விளையாட்டுப் பொருள்களையுமே ஒரு குழந்தை விரும்புவதாகக் கூற முடியாது. ஒரு
குழந்தை கிணறு போல் மரத்தால் செய்யப்பட்ட பொம்மையை விரும்பும்; மற்றொரு
குழந்தை அதை விரும்பாது. ஒரு குழந்தை பூனைப் பொம்மையை நாடும். இன்னொரு
குழந்தை அதை நாடாது. இப்படியே காரணம் காண முடியாத வகையில் குழந்தைகளின்
விருப்பு வெறுப்பு இருக்கும்.
 
     விளையாட்டுப் பொருள்களை விற்கும் கடைக்குள் நுழைந்து ஒருவர் தம்
குழந்தைக்கு விருப்பமான இருபது பொம்மைகளைப் பொறுக்கி எடுத்து வாங்கிக்
கொண்டு போவதாக வைத்துக்கொள்வோம். அவருடைய பக்கத்து வீட்டார் மற்றொரு
நாள் கடைக்குப் போய்ப் பலவகை விளையாட்டுப் பொருள்கள் இருபது அடங்கிய
தொகுதியான (Set) பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டுபோய்த் தன் குழந்தைக்குக்
கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு குழந்தைகளும் பொருள்களை
வைத்துக் காப்பாற்றுவதில் அக்கறை உடைய குழந்தைகளே என்றும், ஒரே அளவான
ஆற்றல் உடைய குழந்தைகள் என்றும் கொள்வோம். அப்படி இருந்தால், ஓராண்டு
கழிந்த பிறகு எந்தக் குழந்தை தந்தை வாங்கிக் கொடுத்த எல்லாப் பொம்மைகளையும்
இழக்காமல்