பக்கம் எண் :

76 இலக்கிய ஆராய்ச்சி
 
வைத்திருக்கும்? எந்தக் குழந்தையிடம் பலபொம்மைகள் காணாமற்போயிருக்கும்?
தொகுதியாகப் பொம்மைகளைப் பெட்டியில் வைத்து விளையாடி வந்த குழந்தையிடம்
அந்த இருபது விளையாட்டுப் பொருள்களும் அப்படியே இருக்கக் காணலாம்; அல்லது
அவற்றில் ஒன்று இரண்டே இழக்கப்பட்டிருக்கலாம்; பெரும்பான்மையான பொருள்கள்
இழக்கப்படாமல் இருக்கும். ஆனால், பொம்மைகளைத் தனித்தனியே பொறுக்கி எடுத்து
வாங்கியவரின் குழந்தையிடம் பல பொம்மைகள் காணாமற் போயிருக்கும்; சில
பொருள்களே எஞ்சியிருக்கும்.
 
     இதிலிருந்து விளங்கக்கூடிய உண்மை ஒன்று உள்ளது. அந்த இருபதும்
விருப்பமான பொம்மைகளாகவே இருந்தாலும், தனித்தனியாக இருக்கும் நிலையில்
எல்லாவற்றையும் வைத்துக் காப்பாற்ற முடியாது. ஆனால், விருப்பமான பொம்மைகள்
பத்தும், விருப்பமில்லாதவை பத்துமாக இருந்தாலும், தொகுதியாகப் பெட்டியில்
வைத்துக் காப்பாற்றும் நிலையில் இருக்குமாயின், எல்லாவற்றையும் வைத்துக்
காப்பாற்றும் ஆற்றல் குழந்தையின் மன நிலையை மட்டும் பொறுத்திருக்கவில்லை;
பொருள்களின் தன்மையையும் பொறுத்திருக்கின்றது. பொருள்கள் ஒரு சேர ஒரு
பெட்டியில் அமைந்திருக்கக் கூடிய வாய்ப்பையும் சிறப்பையும் பெற்றிருந்தால், வைத்துக்
காப்பாற்றும் ஆற்றல் குழந்தைக்கு வளர்கிறது.
 
     இந்த உண்மை இலக்கியத்தின் வாழ்வுக்கும் பொருந்துவதாகும். இலக்கியத்தில்
தனி நிலைச் செய்யுள், தொடர் நிலைச் செய்யுள் என்ற பாகுபாடு உண்டு.
தனிப்பாடல்களாக மக்களிடம் பரவுகின்ற இலக்கியப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த
பாட்டுக்களாகவே இருக்கின்றன. ஆனால், அவற்றில் தான் சிதைவும் அழிவும்
மிகுதியாக ஏற்படுகின்றன. அதனால் நாளடைவில் அவற்றைத் திரட்டி ஒரு
தொகுதியான நூலாக்கித்