பக்கம் எண் :

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 77
 
தரவேண்டிய நிலைமை நேர்கின்றது. அழியாமல் காப்பதற்காக அறிஞர்கள் செய்கின்ற
நன்முயற்சியே இது. புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க காலத்துத் தொகை
நூல்களும் பிற்காலத்துத் தொகை நூல்களான புறத்திரட்டு, தனிப்பாடல் திரட்டு
முதலியவைகளும் இந்த நல்ல முயற்சியால் காப்பாற்றப்பட்டவைகளே. இவ்வாறு அவ்வக்
காலத்தில் அறிஞர் சிலர் தோன்றி இந்தத் தனிப்பாடல்கள் சேர்ந்து தொகுதியாக
வாழக்கூடிய இலக்கிய பெட்டி அமைத்துத் தராமலிருந்தால், தமிழிலக்கியம்
எத்தனையோ மணிகளை இழந்திருக்கும். சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர் காலத்
தொடக்கத்தில் அரசர்களும் அறிஞர்களுமாகச் சேர்ந்து, தொகுப்பித்தோரும்
தொகுத்தோருமாகத் தமிழிலக்கியத்திற்குச் சிறந்த தொண்டு ஆற்றிச் சென்றார்கள்.
அவர்களின் தொண்டு இல்லையானால், இன்று புறப்பொருள் பற்றிய பழைய தனிப்
பாடல்கள் நானூறு கிடைக்க வழியில்லாமல், இருபதோ முப்பதோ கிடைத்திருக்கக்
கூடும்; அகப்பொருள் பற்றிக் குறுந்தொகையும் நற்றிணையும் நெடுந்தொகையுமாக
ஆயிரத்திருநூறு தனிப்பாடல்கள் கிடைக்கும் நிலைக்கு வழி இல்லாமல், சிதறுண்ட
நிலையில் அறுபது எழுபது பாடல்கள் கிடைத்திருக்கும், மற்றப் பாடல்களும் இவ்வாறே
மறைந்திருக்கும். பழந்தமிழ் நாட்டில் இலக்கிய வளம் இருந்திருப்பதாக நம்புவதற்கில்லை
என்று கோணல் ஆராய்ச்சியாளர்கள் வசை மொழி கூறவும் இடம் நேர்ந்திருக்கும்.
தொகுப்பித்தவரும் தொகுத்தவருமாகத் தொண்டு ஆற்றிய புரவலரும் புலவரும் ஆகிய
பெருமக்களின் முயற்சியால், இன்று அந்த வசை மொழிக்கு இடமில்லை.
நூற்றுக்கணக்காக, ஆயிரணக்காகப் பழைய பாடல்கள் தமிழில் உள்ளன என்று
தலைநிமிர்ந்து சொல்லுதற்குரிய பெருமையை நிலைநிறுத்திச் சென்றவர்கள் அவர்களே.