இன்று புறநானூற்றிலோ அகநானூற்றிலோ உள்ள எல்லாச் செய்யுட்களையும் படிக்கின்ற எல்லோரும் விரும்புவதாகச் சொல்ல முடியாது. சில பாடல்களைச் சிலர் விரும்பலாம்; அவற்றையே வேறு சிலர் விரும்பாதிருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலராலும் விரும்பப் பெற்ற சில செய்யுட்களை இந்த நூற்றாண்டினர் விரும்பாமலிருக்கலாம்; அடுத்த நூற்றாண்டின் மக்கள் அவற்றை வெறுக்கும் நிலையும் நேரலாம். ஆனால், அந்தச் செய்யுள்களில் சிலவற்றையேனும் சிலரேனும் நாடுகின்ற வரையில், முழு நூல்களாக அவற்றில் உள்ள எல்லாப் பாடல்களும் வாழப்போவது உறுதி. தனிப் பாடல்களாக இருக்காமல் தொகைகளாக அவை அமைந்திருப்பதே இந்த நல்வாழ்விற்குக் காரணமாகும். விளையாட்டுப் பொருள்கள் தொகுதியாக இருப்பதால், விரும்பாத பொம்மைகளையும் குழந்தை அந்தப் பெட்டியில் வைத்துக் காப்பாற்ற வில்லையா? அது போன்றதே இந்த இலக்கியத் தொகுதிகளின் வாழ்வுமாகும். தொகுதியாக இருந்தும், ஒன்று அல்லது இரண்டு பொம்மைகளைக் குழந்தை எப்படியோ உடைத்துவிடுவதும் இழந்துவிடுவதும் உண்டு. அவ்வாறே, புறநானூறு முதலான தொகை நூல்களிலும் ஒரு சில பாடல்கள் எப்படியோ சிதைந்தும் அழிந்தும் காணப்படுகின்றன. செல்லோ பிறவோ காரணமாக இருந்திருக்காலாம். அச்சுப் பொறியின் உதவியால் ஆயிரக் கணக்கான நூல்களை அச்சடித்துப் பரப்பும் வாய்ப்பும் கிடைத்துள்ள காரணத்தால் இனி அத்தகைய அழிவுக்கும் சிதைவுக்கும் இடமே இல்லை. இனி ஒரு பகுதி மட்டும் வேண்டுமானாலும் தொகை நூல்களில் உள்ள எல்லாச் செய்யுட்களையும் வைத்துக் காத்தே தீரவேண்டும். ஒரு செய்யுளும் வேண்டியதில்லை என்று அடியோடு வெறுக்கும் நிலை நேர்ந்தாலன்றி எவ்வகை அழிவும் இத்தகைய இலக்கியங்களை அணுக முடியாது. குழந்தையின் பொம்மைகளைப் போன்றே | | |
|
|