பக்கம் எண் :

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 79
 
இவற்றை இன்று தொகுத்து வைத்துக் காக்கும் பெட்டி செல்லரிக்க முடியாத இரும்புப்
பெட்டியாகும். தொகுப்பித்தோரும் தொகுத்தோருமாகிய முன்னோர்கள் தேடிக்
கொடுத்த பெட்டி ஓலைப் பெட்டி. இன்று அச்சுப் பொறி தேடிக் கொடுத்தது உரமான
இரும்புப் பெட்டியாகும்.
 
     முன்னோர்கள் தேடித்தந்த ஓலைப் பெட்டிக்குத் தமிழுலகம் எவ்வளவோ
கடமைப்பட்டிருக்கிறது. கணக்கற்ற விளையாட்டுப் பொருள்களைத் தாயும் தந்தையும்
வாரந்தோறும் வாங்கிக் கொடுத்தும் குழந்தை அவற்றைக் காக்க வகை இல்லாமல்
இழப்பது போன்ற நிலையில் அன்றைய தமிழர்கள் இருந்தார்கள். புறப்பொருள் பற்றி
அரசரின் வீரம், கொடை முதலிய பற்றி பழங்காலத்தில் எழுந்த பாடல்கள்
கணக்கற்றவை என்று கூற வேண்டும். புறப் பொருள் பற்றிய செய்யுட்கள் இன்றைய
செய்தித் தாள்களில் வெளிவரும் செய்திகளைப் போன்றவை. அவற்றுள்
பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் காலத்திற்குமே பயன்பட்டு, பிற
இடங்களுக்கும் காலங்களுக்கும் பயன்படாதவை, சிறு பான்மையானவை எல்லாக்
காலத்திற்கும் பொதுவாக நெடுங்காலம் பயன்படக்கூடியவை, அவை மட்டுமே
பொதுவாக மக்களுக்குப் பயன்படும் இலக்கியமாக வாழத்தகுந்தவை.
 
     எடுத்துக்காட்டாக ஓர் அரசனுடைய பிறந்த நாள் விழாவின் போது, அவன்
செய்த போர்களையும் எய்திய வெற்றிகளையும் புகழ்ந்து அழகாகப் பாடிய செய்யுட்கள்
பல இருக்கலாம். அவை அத்தனையும் அன்று அங்குக் கூடியிருந்த மக்கள் மட்டும்
போற்றக் கூடிய செய்யுட்களாக இருந்திருக்கலாம். ஆயின் அந்த அரசன் ஆவி துறந்த
காட்சிகளைக் கண்டு உருகிய புலவர் ஒருவர் பாடிய பாட்டு மட்டும் நெடுங்கால
வாழ்வைப் பெற்றுவிடும். அரசன் இறந்த ஊரில் அன்று இருந்த மக்களே அல்லாமல்,
வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு