பக்கம் எண் :

80 இலக்கிய ஆராய்ச்சி
 
காலங்களில் வாழ்வோரும் அந்தப் பாட்டைப் பாடிப் பாடிப் போற்றக் கூடும். மக்கள்
பலரும் பல காலத்திலும் பொதுவாக உணர்ந்து உருகக் கூடிய பொது அனுபவமான
ஆழ்ந்த துன்ப உணர்ச்சி அந்தப் பாட்டில் ததும்பியிருந்தால், அது அத்தகைய
வாழ்வை இடமும் காலமும் கடந்த வாழ்வைப் பெற்றுவிடும் அன்றோ? 1940ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் பதினோராம் நாள் வெளியான செய்தித்தாள் 1950ஆம்
ஆண்டில் தேவையானதாக இராது. அதைத் திரும்பப் படிக்கவே விருப்பம் தோன்றாது.
ஆனால், அன்றைய செய்தியில் காந்தியடிகளின் சிறந்த பேச்சு அல்லது கட்டுரை
ஒன்றுவெளியாகியிருந்தால் அது மட்டும் காலம் கடந்த இலக்கியமாக விளங்கும்.
அவைகளே புறப் பொருட் பாட்டுக்கள். அந்தப் பாட்டுக்கள் சங்க காலத்தில்
ஆயிரக்கணக்காக இருந்திருத்தல் கூடும். ஆனால், அவைகள் எல்லாவற்றையும்
அக்காலத்தினர் எல்லோரும் போற்றியிருக்க முடியாது. சிலருக்குச் சில பாட்டுக்களின்
அனுபவம் மிகப் பிடித்திருக்கும்; ஆகையால் அவற்றை மட்டுமே அவர்கள்
போற்றியிருப்பார்கள். வேறு சிலவற்றை வேறு சிலர் போற்றியிருக்கக் கூடும். இவ்வாறு
இலக்கியத்தைச் சுவை பார்ப்பது எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டினர்க்கும் இயல்பு.
இலக்கியச் சுவை என்பது அவரவருடைய வாழ்க்கையனுபவத்தையும் இலக்கியப்
பயிற்சியையும் ஒட்டியது. ஆகையால் ஆயிரக் கணக்காக இருந்த அந்தப்
புறப்பாடல்களில் ஒரு சிலர்சேர்ந்து சிலவற்றைப் பொறுக்கித் தொகுத்த தொகை நூலே
புறநானூறு. இவ்வாறே மற்றத் தொகை நூல்களும் ஏற்பட்டன. இவ்வாறு தொகுக்கு
முன்பு மறக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் அழிந்த பாட்டுக்கள் போக, தொகுப்பித்தோரும்
தொகுத்தோரும் தமக்குப் பிடித்த சிலவற்றையே பிற்காலத்தார்க்கு உரிய இலக்கியச்
செல்வமாகச் சேர்த்துத் திரட்டி வழங்கிச் சென்றார்கள். (அவற்றுள்ளும் சில மறைந்து
போயின; சில சிதைந்து போயின. நற்றிணையில் 234ஆம் பாட்டு முற்றும் இல்லை;
385ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்தது. ஐங்குறுநூற்றில் 129, 130ஆம் பாட்டுக்கள்
மறைந்து போயின; 416, 490 சிதைந்துள்ளன. பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் பத்தாம்
பத்தும் கிடைக்கவில்லை; அவற்றுள் சிலமட்டும் உரை நூல்களில் காணப்படுகின்றன.
பரிபாடலில் தொகுக்கப்பெற்ற எழுபது பாடல்களுள் இப்பொழுது உள்ளவை
முப்பத்துமூன்றே; எஞ்சிய முப்பத்தேழும் கிடைக்கவில்லை. புறநானூற்றில் 267, 268ஆம்
பாட்டுக்கள் மறைந்து போயின; 328, 370ஆம் பாட்டுக்கள் முதற்பகுதி சிதைந்துள்ளன;
244, 355, 361ஆம் பாட்டுக்களில் இடையிடையே சில பகுதிகள் மறைந்து போயின.
ஆயினும் இத்தொகுப்பு முயற்சி நடைபெறாதிருப்பின், சங்கப் பாட்டுக்குள் பற்பல
மறைந்து போயிருத்தல் கூடும் என்பது இங்கு உணரத்தக்கது.)