பக்கம் எண் :

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 81
 
அந்நாள் வரையில் சங்கப் பாட்டுக்கள், குழந்தைகள் விருப்பம் போல் பொறுக்கி
எடுத்து விளையாடி இழந்து விடும் பொம்மைகளாக இருந்தன. பற்பல இழக்கப்பட்டுப்
போயின. அதன் பிறகே எஞ்சி நின்ற சங்கப் பாட்டுக்கள், பெட்டிகளில் தொகுதியாக
வைத்து இழக்கப்படாதவாறு குழந்தையிடம் கொடுக்கப்படும் பொம்மையாக விளங்கி
வருகின்றன.
 
     பிற்காலத்துத் தனிப்பாடல் திரட்டுப் போன்ற நூல்களும் இவ்வாறே அழியாமல்
காக்கப்படும் சிறப்பை அடைந்தன. இன்று அவற்றில் உள்ள தனிப்பாடல்களில்
சிலவற்றைச் சிலர் விரும்பாமலிருக்கலாம்; வெறுக்கவும் வெறுக்கலாம். ஆனால்,
தனித்தனியே சிற்சிலர் கொள்ளும் விருப்பு வெறுப்பைக் கடந்து, பொதுவாக
விரும்பப்படும் சிறப்பை எல்லாப் பாட்டுக்களும் சேர்ந்து பெறுகின்றன. வாழ்ந்தால்
எல்லாம் வாழ்வோம், வீழ்ந்தால் முழுமையும் வீழ்வோம் என்று கூறுவன போல், அவை
தொகை நூல்களாகி வல்லமையோடு வாழ்கின்றன. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே'
என்னும் அரசியல் உண்மையை இலக்கிய உலகம் உணர்ந்த கதை இது.