பக்கம் எண் :

  12. மலரும் மாலையும்
 
      ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் ஒவ்வொரு குறை உண்டு. தமிழ் நாட்டின்
வரலாற்றிலும் அப்படிப்பட்ட குறை ஒன்று உண்டு. அது அடிப்படைக் குறையாகவே
இருக்கின்ற. வரலாறு என்னும் துறையைப் போற்றி வரலாறு எழுதி வைக்காததே அந்தக்
குறையாகும்.
 
     இலக்கியத் துறையிலும் பழந்தமிழ்நாட்டில் இத்தகைய அடிப்படைக் குறை உண்டு.
அதாவது, இலக்கியம் எதிர்காலத்தில் நீடு நின்று நிலவும் வகையில் அவர்கள் அதை
அமைத்துவிட்டுச் செல்லவில்லை. ஆக்கத் துறையில் இருந்த கலையாற்றல் மாறிக்
களப்பிரர் காலத்தில் பட்ட அல்லலே, முதல் முதலில் இலக்கியத்தைக் காக்கும்
பொறுப்பைப் பழந்தமிழ் மக்களுக்கு உணர்த்தியது. அதற்குமுன், தனித் தனியாகப் பல
பாட்டுக்களைப் பாடி விட்டுச் சென்றார்களே தவிர, அவற்றைக் காக்க
வழிகோலவில்லை. இலக்கியத்தை ஆக்கும் ஆற்றல் மிகுந்திருந்தும், காக்கும் திறன்
இல்லாத குறை அடிப்படைக் குறையே அன்றோ?
 
     கரிகால் வளவன் என்ற புகழ்பெற்ற சோழவேந்தன் தமிழகத்தை ஆண்டுவந்தான்.
அவன் ஒரு சிறந்த காவியத்திற்கு மட்டும் அல்லாமல், பல நூல்களுக்குத் தலைவனாக
விளங்கக் கூடிய சிறப்புப் பெற்றிருந்தவன். வேறு நாட்டில் இத்தகைய சிறப்புடன் ஒரு
வேந்தன் ஆட்சி