பக்கம் எண் :

மலரும் மாலையும் 85
 
முடியாத ஒருவனாகவே அவன் இருக்கின்றான். சிறந்த காவியத்தின் தலைவனாக அவன்
இருந்தால், பொது மக்கள் பலரும் அறிந்த பண்டைத் தமிழகத் தலைவனாக
அவனுடைய புகழ் பரவியிருக்கும். அதன் வாயிலாகத் தமிழ் இலக்கியம் வளம்
பெறுவதோடு தமிழ்நாடும் பெருமை பெற்றிருக்கும்; தமிழ்மக்களும் உயரப் பெற்று
இருப்பார்கள். அந்தச் சிறப்பு வாய்க்காத காரணத்தால் "என்ன இருக்கிறது தமிழில்?
அகப் பொருள் புறப்பொருள்; இவ்வளவுதானே? பழைய காவியங்கள் உண்டா?
வால்மீகி, ஹோமர் போன்ற சிறந்த பழைய புலவர்கள் உண்டா?" என்று சிலர் மனம்
நொந்து கேட்கும் நிலைமை இருக்கின்றது.
 
     தமிழில் எல்லாம் இருந்தன. இருந்துவந்தன. ஆனால் வெளிநாட்டார் அறிந்து
வணக்கம் செய்யும் வகையில் வரலாறும் இலக்கியமும் கைகோத்து அமையவில்லை.
வால்மீகி, ஹோமர் போன்ற பழம் புலவர்கள், ஒரு சிலர் அல்லர், மிகப் பலர்
பழந்தமிழ் நாட்டில் இருந்தனர். ஆனால் பிற நாட்டார் உணர்ந்து போற்றும் வகையில்
பெரிய காவியங்களை அவர்களின் வாயிலாகத் தமிழகம் பெறவில்லை. இல்லாதிருந்தது
குறை அன்று; இருந்தவற்றை அமைக்கும் வகையில் அமைக்காதது தான் குறை. என்
செய்வது?
 
     உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம். உணவிலும் உடையிலும் காணப்பட்டு
வரும் இந்த எளிமையும் செம்மையுமே பண்டைத் தமிழ்மக்களின் உள்ளத்திலும்
காணப்பட்டு வந்தன. தமிழ்ப் புலவரின் கலை உள்ளத்திலும் இந்த எளிமையும்
செம்மையுமே குடி கொண்டிருந்தன. ஆனால் ஒரு சிறந்த உணர்ச்சி, அதற்கு உருவம்
தரும் ஒரு பாட்டு என்ற அளவில் அவர்கள் அக்காலத்தில் பாடிச் சென்றார்கள்.
அந்தச் சிறந்த உணர்ச்சி மறைந்தபின். வேறு ஓர் உணர்ச்சி தோன்றிய போது,