பக்கம் எண் :

86 இலக்கிய ஆராய்ச்சி
 
அதற்கு வேறு ஒரு பாட்டுப் பாடப்பட்டது. இவ்வாறே அவ்வப்போது தோன்றும்
உள்ளத்து உணர்ச்சிகளை அவ்வப்போது தனித்தனிப் பாட்டுக்களாகப் பாடினார்கள்.
 
     உண்மைதான் ஒரு நீண்ட காவியமாகப் பாடத் தக்க வகையில், ஒரு புலவருடைய
உணர்ச்சி ஒரு தலைவனைப் பற்றி நெடிது நின்று வாழ்வதில்லை. ஆகையால், கலப்பற்ற
- பொய்யற்ற - உணர்ச்சியை மட்டும் பாட்டாக வடிக்கும் கலைத்திறனைக் கொண்டு
ஒரு பெரிய காவியம் பாடுவது இயலாது. அவ்வாறு இயற்றுகின்ற காவியத்தில் கலப்புக்கு
இடம் இருந்தே தீரும். அந்தக் கலப்புப் பகுதியே ஓர் உணர்ச்சிக்கும் அடுத்த மற்றோர்
உணர்ச்சிக்கும் இடையே உள்ள பிணைப்பாகும். அந்தக் கலப்பே பல்வகை
உணர்ச்சிகளைப் பிணைத்துப் பெரிய காவியமாக்க வல்லது.
 
     கம்பரைப் போன்ற பெருங் கவிஞர்களின் காவியங்களிலும், கற்பவர்
எல்லாவற்றையும் உள்ளவாறே கொள்ளாமல் சுவைத்து சீர்தூக்கி ஏற்பவற்றை மட்டும்
கொள்வதற்குக் காரணம் இத்தகைய கலப்பு உள்ளமையே ஆகும். தனித்தனியே
மலர்களை எடுத்து முகர்ந்தால் தூய இயற்கை மணம் மட்டும் கமழும், ஆனால்
மாலையாகத் தொடுத்தலில், அந்த இயற்கை மணத்தோடு எவ்வாறேனும் மணமற்ற
நாரும் இயைந்தே நிற்கும். முகர்பவர் அதை முழுமையாகக் கொண்டு மாலையைப்
பிரித்துத் தனித் தனியே எடுத்து ஒவ்வொன்றாக முகரத் தொடங்கினால், நாரின்
பகுதிகளை முகர்ந்து முகர்ந்து மணமற்றது என்று, வீசவே தோன்றும். ஆனால் அது
முகர்பவரின் அறியாமை அன்றி மாலையின் குற்றம் அன்று, தனி மலர்களைப்
பிணைக்க வந்த நாரினையும் மலரின் பகுதி என்று எண்ணியதை முகர்பவரின்
அறியாமை தவிர வேறு என்ன என்பது?