பக்கம் எண் :

மலரும் மாலையும் 87
 
     காரிகால்சோழனையும் காவியத் தலைவனாக்கிப் பெரிய நூல் ஒன்று
பாடியிருந்தால், செம்மையான எளிய உணர்ச்சிப் பகுதிகளோடு வேறுசிலபகுதிகளும்
நார்போல் கலந்திருக்கும். உணர்ச்சி மலர்களால் அந்த நாரும் மணம் பெற்றிருக்கும்.
பழந் தமிழிலக்கியம் சொன்மாலைகள் பல பெற்றுள்ளது, என்ற புகழும் வாழ்ந்திருக்கும்.
ஆனால், எளிமையும் செம்மையும் குறிக்கோளாகக் கொண்ட பழம் புலவரின் உள்ளம்
அதற்கு இடம் தரவில்லை. அதனால் அப் புலவர்கள் இழந்தது ஒன்றுமில்லை. ஆனால்
மொழியும் நாடும் இழந்தவை பல. தாமும் தம்மைச் சார்ந்தோரும் பயன் பெற
பாமலர்களே போதும் என்று பழந்தமிழ்ப் புலவர்கள் எண்ணினார்கள், வருங்கால
மக்களின் வாழ்வுக்குப் பாமாலைகள் பயன்படுமே என்பதை அவர்கள் எண்ணவில்லை.
விளைவு என்ன? தமிழ்ப் பூஞ்சோலைகள் பல இருந்தும், பல வகை மலர்கள் பூக்கும்
வளம் வாய்ந்திருந்தும், பாமாலை தொடுக்கும் வழக்கம் இல்லாமற் போயிற்று. வளம்
குறைந்த பிற சோலைகளில் உலவுவோர் மணம் குறைந்த மாலைகளை அணிந்து
பெருமிதம் கொள்ளும்போது, தமிழர் மணமிக்க தனி மலர்களை ஆங்காங்கே உதிர்த்து
விட்டு ஒரு சில பூக்களைக் கையில் ஏந்தித் திரிவதாயிற்று.
 
     தமிழகத்திற்குத் தனிநிலைச் செய்யுட்கள் மட்டும் இருந்தால் போதாது; தொடர்
நிலைச் செய்யுட்களும் வேண்டும், பெரிய நூல்களும் வேண்டும் என்ற உண்மையை
முதல் முதலில் உணர்ந்தவர் யாரோ, அறியோம், ஆனால், இந்தக் குறையை முதல்
முதலாகப் போக்கியவர் இருவர்; அவர்கள் இளங்கோவடிகளும் சாத்தனாரும் ஆவர்.
அவர்கள் இயற்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே தமிழிலக்கியம் முதல் முதலாகக்
கண்ட பாமாலைகள். பின்வந்த புலவர்கள் அவர்கள் காட்டிய நல்ல நெறியைப்
பின்பற்றித் தமிழன்னைக்கு நறுமண