பக்கம் எண் :

மலரும் மாலையும் 91
 
காவியங்களை இயற்றித் தந்தனர். அவற்றால் அவர்களின் இலக்கியமும் பெருமையுற்றது;
அவர்களின் மொழியும் சிறப்புப் பெற்றது. அந்தக் கதைகளில் காணப்படும் தேர்கள்
மறைந்து விமானங்கள் பெருகிவிட்டன; வில்லும் வாளும் மறைந்து அணுகுண்டும்
நீரகக்குண்டும் வந்து விட்டன. ஆயினும் குண்டுகளைக் கண்டு பிடித்துள்ள முன்னேற்ற
நாடுகளும் இன்று அந்தக் கதைகளை மொழி பெயர்த்துப் படித்துப் போற்றுகின்றன.
சுவை மிக்க கதைகளை எந்தக் காலத்திலும் மக்கள் விரும்பிப் போற்றுவர். கதைகளின்
கற்பனை அத்தகைய ஆற்றல் பெற்றது. மனித உள்ளம் என்றும் கற்பனையை நாடிச்
செல்லும் இயல்பினது. அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தை
அடுத்து வாழ்ந்த ஆந்திரரும் கன்னடரும் அகநானூற்றையும் நற்றிணையையும்
நாடிவராமல் இராமாயணத்தையும் பாரதத்தையும் நாடிச் சென்றனர்; சங்கப் பாட்டுக்களை
மொழி பெயர்த்து வடமொழியின் துணை கொண்டு தம் தம் இலக்கியங்களை
வளர்த்தனர்; அதனால் தமிழின் தொடர்பை விட்டு வடமொழி உறவை மிகுதியாக
மேற்கொள்ளவும் நேர்ந்தது. தமிழர் நல்ல கற்பனைவளம் பெற்றிருக்கும் கதை வடிவான
அத்தகைய காவியங்கள் பல பழங்காலத்தில் இயற்றாமல் போனது, மணமும் எழிலும்
மிக்க மலர்கள் கிடைத்தும் மாலைகள் தொடுத்து நல்காத குறையே ஆகும்.