பக்கம் எண் :

94 இலக்கிய ஆராய்ச்சி
 
ஒலிப் பகுதிகளையே சீர், தளை முதலான பெயர்களால் வழங்குவர். இந்தச் சிறுபாட்டில்
 இருவகை ஒலி நயத்தையும் தெளிவாக உணரலாம்.
 
      பாட்டின் உயர்ந்த கருத்து அமிழ்தம் போன்றது என்றால், ஒலிநயம் அமைந்த
பாட்டு அந்த அமிழ்தத்தை இன்பமாகப் பருகுவதற்கு உதவும் அழகிய கிண்ணம்
போன்றது. அது கண்ணாடிக் கிண்ணம் போல் எளிமையும் தூய்மையும் கூடிய அழகு
உடையதாக விளங்கலாம். மேலே காட்டிய பாட்டு அத்தகைய எளிய தூய ஒலிநயம்
உடையதாகும். அல்லது, அருமையும் வேலைப்பாடும் மிகுந்த பொற்கிண்ணமாகவும்
இருக்கலாம். எதுகை மோனைச் செறிவும், சீர் தளைச் சிறப்பும் மிகுந்த கலிப்பா
முதலானவை பொற்கிண்ணம் போன்றவையாகும்.
 
  பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே;

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே;

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே;

(கலித்தொகை - 9)

     பெருங்கடுங்கோ என்பவர் பாடிய இந்த மூன்று தாழிசைகளிலும் விளங்கும் ஒரு
கருத்து அவ்வாறு சிறந்த வேலைப்பாடு அமைந்த பொலன்கலத்தில் - பொன்
கிண்ணத்தில் - உள்ள அமிழ்தம்போல் விளங்குகின்றது.