பக்கம் எண் :

உயிரும் உடம்பும் 95
 
     கிண்ணங்கள் சில பளபளப்பாகப் பகட்டான நிறங்களோடு காட்சி அளிக்கலாம்;
ஆனால், அவற்றுள் இருப்பது உயர்ந்த அமிழ்தமாக இராமல், புளித்த காடியாக
இருக்கலாம். அதுபோலவே, எதுகை, மோனை முதலிய ஒலிச்சிறப்பு எல்லாம் மிக
விளங்கும் பட்டாக இருக்கலாம். ஆனால், பாட்டு என்று சொல்லத் தகாதவாறு அதனுள்
அமைந்தது மிக இழிந்த அல்லது பயனற்ற கருத்தாக இருக்கலாம். கிண்ணத்தின்
பகட்டையும் பளபளப்பையும் கண்டு, ஒன்றும் அறியாத குழந்தைகள் மயங்கலாம்;
அறிவுடைய மக்கள், அந்தப் புளித்த காடியைக் கண்டதும் ஒதுங்குவர், இழிந்த பொருள்
அமைந்த பாட்டு எவ்வளவு சிறந்த ஒலிநயம் உடையதாக இருப்பினும், இலக்கிய
அறிவுடையவர் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பர். ஆயினும் பாட்டின்
அமைப்பு முறையை - சீர் தளை அடி முதலியவற்றை - புறக்கணிப்பதில்லை; வேறு
உயர்ந்த கருத்தை அமைத்துப் பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். புளித்த
காடியைக் கொட்டிவிட்டு, அந்தக் கிண்ணத்தை வேறு பொருளுக்குப் பயன்படுத்திக்
கொள்வதில் தவறு என்ன? அம்மானை, ஊசல், சாழல் முதலிய பாட்டு வகைகள்
மாணிக்கவாசகருக்கு முன் மக்களின் பொழுதுபோக்கான விளையாட்டுகளுக்கு
உரியவைகளாக இருந்தன. அக்காலத்தின் பயன் தரும் நற்கருத்துக்களை அவற்றில்
அமைத்துப் பாடவில்லை. ஆயினும், அந்தப் பாட்டுகளின் அமைப்புமுறை, கவர்ச்சியாக
இருத்தலை உணர்ந்த மாணிக்கவாசர், அவற்றில் உயர்ந்த கருத்துக்களை அமைத்துப்
பாடினார். அவை இன்றும் வாழ்ந்து விளங்குகின்றன. கலிப்பா முதலிய பாட்டுக்களும்
ஒரு காலத்தில் இவ்வாறு வேறு எந்தெந்தக் கருத்துக்களுக்கோ பயன்பட்டிருக்கும். பிறகு
நுட்பமான அகப்பொருட் பாடல்களுக்கும் பிற நல்ல கருத்துக்களுக்கும் புலவர்கள்
பயன் படுத்திக்கொண்டனர். அவ்வாறே இன்று மனம்