போன போக்காகப் பாடப்படும் சில இழிந்த சினிமாப் பாட்டுக்கள் முதலியன வாழ்வு இழந்து போகும்; ஆயினும், அவற்றுள் ஒலிநயம் அமைந்த அமைப்புமுறை மட்டும் மறக்கப்படாமல், பிற்காலத்துச் சொல்லோவியக் கலைகளுக்கு வார்ப்படம் போல் பயன்படும். | பாட்டுக் கலையில் உயர்ந்த கருத்துக்கள் அழியா வாழ்வு பெறுவது போலவே, சிறந்த வகையான ஒலிநயங்களும் வாழ்வு பெறுவது இந்தக் காரணத்தால் ஆகும். உயர்ந்த கருத்து நினைத்தோறும் உள்ளத்தைக் குளிர்வித்து இன்பம் பயப்பதுபோல் உயர்ந்த ஒலியமைப்பும் கேட்குந்தோறும் செவிப்புலனுக்கு இன்பம் பயக்கிறது. உயர்ந்த கருத்தை உள்ளம் ஒன்றிநினைக்க வேண்டும்; ஆனால், சிறந்த ஒலியமைப்பு, தானாகவே செவிப்புலனைக் கவர்ந்துவிடும், நல்ல கருத்துக் கொண்ட காவடிச்சிந்தைப் பிறர் பாடும்போது உள்ளம் ஒன்றி உணர்ந்தால்தான் கருத்தின்பம் பெறமுடியும். ஆனால் முன்பு ஒருமுறை இருமுறை அந்தக் காவடிச்சிந்தின் ஒலிநயத்தை அனுபவித்திருந்தால் போதும். இப்போது எவ்வளவு பரபரப்பாக வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அந்த ஒலிநயம் தானாகவே செவிப்புலனைக் கவர்ந்துவிடும். வேலைகளில் பரபரப்பாக இருக்கும் ஈடுபாட்டையும் குறைத்துவிடும். எதையோ எண்ணி பிடிவாதம் செய்து அழும் குழந்தை, தாயின், "ஆராரோ ஆரிரரோ" என்ற தாலாட்டைக் கேட்டுத் தூங்கி விடுகிறது. எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் பாம்பு இனிய இசையைக் கேட்டு வேகம் தணிந்து சுருண்டு அமைதி பெறுகின்றது. கன்றை நினைத்து ஓடும் பசுவும் ஆயன் குழலோசையைக் கேட்டுச் சிறிது மெல்ல நடந்தவாறே செவிநிமிர்ந்து கேட்கிறது. விலங்குகளும் பறவைகளும் குழந்தைகளும் மட்டும் அல்லாமல், யோகியரும் இன்னிசையின் கவர்ச்சிக்கும் ஆளாகித் தம் சிந்தையை இசையமைதியில் செலுத்தி | | |
|
|