செவி மறுத்தல் இல்லை; அவ்வாறு கேட்டு மகிழ்ந்த ஒலிகளைச் செவி மீண்டும் கேட்கச் சலிப்பது இல்லை. அதற்கு மாறாகக் கேட்டுப் பழகிய ஒலியமைப்பை மீண்டும் கேட்பதில்தான் செவிப்புலனுக்குச் சிறந்த இன்பம் உள்ளது. மார்கழி மாதத்தில் வைகறையில் தெருவழியே குதம்பைச் சித்தர் பாடலை ஒருவர் பாடிச் செல்லும் போது. அதன் பொருள் உணராதவர்களும் ஒருவகை இன்பம் உறுகின்றனர். "கருவினுரு வாகிவந்து வயதளவிலே வளர்ந்து கவலைபெரிதாகி நொந்து" என்ற திருப்புகழை யாரோ சிறிது தொலைவில் பாடக் கேட்பவர்களும் பொருள் விளங்காவிட்டாலும் இன்புற்றுக் கேட்கின்றனர். அவ்வாறே பாடாவிட்டாலும்; வேறு சொற்களையும் வேறு கருத்துக்களையும் அதே ஒலி வகையில் (அதே மெட்டில்) பாடினாலும் அந்த ஒலியின்பத்தைப் பெற முடிகின்றது. "கிளிக் கண்ணி" "நொண்டிச் சிந்து" என்றவுடன், பழகிய நண்பரின் குரல் கேட்பது போல், பழகிய ஒலியமைப்பு மெல்லச் செவியில் கேட்கிறது. சினிமாப் பாட்டுக்கள் பல பெரு வாழ்வு பெறுவதற்கும் இந்த ஒலிக் கவர்ச்சியே காரணமாகும். | பழகிய வீட்டை விட்டுச் செல்ல மனம் இருப்பதில்லை; பழகிய பேனா முதலிய பொருள்களைப் பிரிய மனம் இருப்பதில்லை; பேயோடாகிலும் பழகிய பின் பிரிதல் அரிது என்று கூறப்படுகின்றது. இவை எல்லாவற்றையும் விடச் செவிப்புலனிடம் பழகிய ஒலிநயங்களுக்கு உள்ள செல்வாக்கே பெரிது; மிகப் பெரிது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததே பாட்டுக் கலை. குழலிசையிலும் குயிலிசையிலும் அருவி யொலியிலும் பிறவற்றிலும் கேட்டுணர முடியாத மிக நுண்ணிய வேறுபாடுகளைப் பாட்டுக் கலையில் அமைத்துள்ளனர் முன்னோர். ஆசிரியப் பாவின் அகவல் ஓசையில் சில வகைகள்; வெண்பாவின் செப்பலோசையில் சில வகைகள்; | | |
|
|